சுற்றுலா விசாக்களை வழங்க சவுதி தீர்மானம்

முதன்முறையாக சுற்றுலா விசாக்களை வழங்க சவுதி தீர்மானம்

by Bella Dalima 27-09-2019 | 5:10 PM
சவுதி அரேபியா முதன்முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்க தீர்மானித்துள்ளது. மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான விதிமுறைகள் தளர்த்தப்படவுள்ளதாக சவுதி அரேபியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் அகமது அல் காதிப் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் UNESCO-வால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 5 முக்கிய இடங்கள் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கச்சா எண்ணெய் வளம் தவிர்த்து, சுற்றுலாத்துறையின் மூலமும் வளர்ச்சியடையச் செய்யும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி அரேபிய அரசாங்கம் அறிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டுவர சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் திட்டமிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக வெளிநாட்டினருக்கான சுற்றுலா விசாக்களை வழங்க முதன்முறையாக சவுதி அரேபியா தீர்மானித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.