கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பேற்றது சவுதி

ஜமால் கஷோக்ஜியின் கொலைக்கு பொறுப்பேற்றார் சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான்

by Bella Dalima 27-09-2019 | 4:37 PM
Colombo (News 1st) பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஊடகவியலாளர் ஜமால் கஷோக்ஜியின் (Jamal Khashoggi) கொலைக்கு சவுதி முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் (Mohammed bin Salman) பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். ஜமால் கஷோக்ஜியின் கொலை தமக்கு தெரிந்து, தமது கண்காணிப்பிலேயே இடம்பெற்றதாகவும், அதற்கான முழு பொறுப்பையும் தாமே ஏற்றுக்கொள்வதாகவும் அடுத்த வாரத்தில் ஔிபரப்பப்படவுள்ள ஆவணப்படமொன்றுக்கு இளவரசர் தெரிவித்ததாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. எனினும், சவுதியில் உள்ள துருக்கியின் கன்சியூலர் அலுவலகத்திற்குள் இடம்பெற்ற ஊடகவியலாளரின் கொலை தொடர்பில் அவர் பொதுவௌியில் எவ்வித கருத்துக்களையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலைக்கு அவர் உத்தரவிட்டதாக CIA மற்றும் சில மேற்குலக நாடுகள் தெரிவித்தன. ஜமால் கஷோக்ஜியின் கொலை சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்திருந்தது. மேலும், இந்த கொலையினால் சவுதி முடிக்குரிய இளவரசரின் பொருளாதார முன்னெடுப்புகளுக்கு தடை ஏற்பட்டது. இதன் பின்னர் சவுதி முடிக்குரிய இளவரசர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இதுவரை விஜயம் செய்யவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் முதலாம் திகதியுடன் ஊடகவியலாளர் ஜமால் கஷோக்‌ஜி கொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.