by Staff Writer 27-09-2019 | 6:30 PM
Colombo (News 1st) இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்ட மா அதிபரின் பரிந்துரைக்கு அமைய இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் சுங்கப் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக சுங்கப் பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன ஆகியோரை உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு கடந்த 19 ஆம் திகதி உத்தரவிடப்பட்டது
கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார்.
அரசுடைமையாக்குவதற்காக இலங்கை சுங்க பொறுப்பில் வைக்கப்பட்ட 8 கிலோகிராம் தங்கம் தொடர்பில் நம்பிக்கையை சீர்குலைத்துள்ளதாக பிரதிவாதிகளுக்கு எதிராக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டுள்ளனர்.
கடந்த ஆட்சிக்காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வழிகாட்டலின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட புத்தர் சிலை ஸ்தாபிப்பு செயற்பாடுகளின் போது, சுங்க பொறுப்பிலிருந்த 8 கிலோகிராம் தங்கத்தை முறையற்ற விதத்தில் வழங்கியுள்ளதாக பிரதிவாதிகள் இருவருக்கும் எதிராக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு கடற்பிராந்தியத்தில் கைப்பற்றப்பட்ட 45.3 கிலோகிராம் தங்கத்தை அரசுடைமையாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதே பிரதிவாதிகள் சட்டவிரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதிவாதிகளுக்கு எதிராக பொது சொத்துகள் சட்டத்தின் பிரகாரம் வழக்கு தொடருமாறு சட்ட மா அதிபர், பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினருக்கு அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதாக சந்தேகநபர்கள் தங்களின் சட்டத்தரணிகளூடாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜகத் விஜயவீர கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையிலும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக செனவிரத்ன பதுளை பொது வைத்தியசாலையிலும் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.