அவன்ற் கார்ட் வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

அவன்ற் கார்ட் வழக்கில் மற்றுமொரு சந்தேகநபர் கைது

by Staff Writer 27-09-2019 | 3:59 PM
Colombo (News 1st) அவன்ற் கார்ட் மிதக்கும் ஆயுத களஞ்சியசாலை வழக்கின் மற்றுமொரு சந்தேகநபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். சிங்கப்பூரிலிருந்து இன்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தபோதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள விஸ்வஜித் நந்தன தியபலனகே என்ற சந்தேகநபர் இராஜகிரிய பகுதியை சேர்ந்தவராவார். அவர் அவன்ற் கார்ட் கரையோர பாதுகாப்பு பிரிவின் தலைமை அதிகாரியாக கடமையற்றியவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். சந்தேகநபருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தால் வௌிநாட்டுப் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது. மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவரை கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவன்ற் கார்ட் வழக்கு தொடர்பில் இதுவரையில் 8 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் நான்கு பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். மூன்று சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி 816 துப்பாக்கிகளையும் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான ரவைகளையும் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை தொடர்பில் அவன்ற் கார்ட் கப்பல் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.