ரயில்வே மற்றும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

ரயில்வே மற்றும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறது

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2019 | 8:16 pm

Colombo (News 1st) ரயில்வே மற்றும் ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க நடவடிக்கையின் காரணமாக மக்கள் இன்றும் அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

சம்பள முரண்பாட்டை நீக்குதல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள், சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட சில தொழிற்சங்கங்கள் இன்றும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன.

அதனால் 12 அலுவலக ரயில்கள் மாத்திரமே இன்று சேவையில் ஈடுபட்டன.

மஹவ, குருநாகல், கண்டி, பொல்கஹவெல, சிலாபம், அவிசாவளை, காலி மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் இருந்து குறித்த ரயில்கள் சேவையில் ஈடுபட்டன.

சில ரயில்களை சேவையில் ஈடுபடுத்த இன்று மாலை திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வித தடையுமின்றி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கு ஓய்வு பெற்ற அதிகாரிகளை சேவைக்கு அழைக்குமாறு ரயில்வே பொது முகாமையாளருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்கப்படும் வரை பணிப்பகிஷ்கரிப்பை கைவிடப்போவதில்லை என ரயில்வே சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டார்.

இதேவேளை, ரயில் சாரதி ஒருவர் 3 இலட்சத்திற்கும் அதிகமான சம்பளத்தையும் மேலதிக நேர கொடுப்பனவுகளையும் பெற்றுக்கொள்வதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் 2,50,000-இற்கும் அதிக சம்பளத்தைப் பெறுவதாகவும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இரண்டு இலட்சத்திற்கும் அதிக சம்பளத்துடன் மேலதிக நேர கொடுப்பனவுகளையும் பெறுவதை நாட்டு மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க குறிப்பிட்டார்.

இம்முறை மீண்டும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

ஜனவரி முதலாம் திகதி முதல் எமது அரசாங்கம் சம்பளத்தை அதிகரிக்கும் செயற்பாட்டை முன்னெடுக்கின்றது. 2010 ஆம் ஆண்டு 10,000 ரூபாவை அதிகரித்தோம். அடிப்படை சம்பளத்துடன் அது சேர்க்கப்பட்டது. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் 2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டது. அத்துடன், இம்முறை மேலும் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் பிரகாரம், அதிக மேலதிக நேரக் கொடுப்பனவு மற்றும் சம்பளத்தை பெறும் ஊழியர்கள் அரசாங்கத்தை அசௌகரியத்திற்குள்ளாக்கும் செயற்பாட்டில் ஈடுபடுவது ஏன் என்பதனை நாட்டு மக்கள் அறிய வேண்டும்.

என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பினால், பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளுக்கு இன்றைய தினமும் இடையூறுகள் ஏற்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர்.

சம்பள முரண்பாட்டிற்கு தீர்வு வழங்குமாறு கோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் நேற்றைய தினம் முதல் சுகயீன விடுமுறை பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்தனர்.

சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அரச நிறைவேற்று அதிகாரிகளும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தற்போது பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்