ஜனாதிபதி தேர்தலில் பக்கசார்பின்றி நடுநிலையுடன் பொலிஸார் செயற்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

ஜனாதிபதி தேர்தலில் பக்கசார்பின்றி நடுநிலையுடன் பொலிஸார் செயற்பட வேண்டும்: ஜனாதிபதி வலியுறுத்தல்

எழுத்தாளர் Bella Dalima

27 Sep, 2019 | 8:37 pm

Colombo (News 1st)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை சந்தித்தார்.

பொலிஸ் தரப்பினர் தமது பொறுப்பில் உள்ளதால், மிகவும் பக்கசார்பற்ற சுயாதீன தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தமக்கு எதிராக எந்தவொரு குற்றச்சாட்டும் சுமத்தப்படாத அளவிற்கு, ஏதேனுமொரு தரப்பிற்கு ஆதரவாக செயற்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படாத வகையில், பக்கசார்பின்றி நடுநிலையுடன் பொலிஸார் செயற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

பொலிஸ் திணைக்களத்தின் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கி, மிகச்சிறந்த சேவையை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்திற்கமைய மாதாந்தம் இந்தக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

அதிகாரிகளின் சுகாதார நிலைமையை பரிசோதிப்பதற்கான வேலைத்திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கி மானியத்தை வழங்குது குறித்து இதன்போது அதிகக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பொலிஸ் வைத்தியசாலைகளுக்கு விரைவில் வைத்தியர்களை நியமிப்பதற்கும் இலங்கை பொலிஸ் நிறைவேற்றுத் தர அதிகாரிகளின் சம்பள மற்றும் தரப்படுத்தல் முரண்பாட்டை நீக்குவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதேவேளை, போதைப்பொருள் மற்றும் வெடிபொருட்களை அடையாளம் காணுவதற்கான சில அதிநவீன உபகரணங்கள் சீன அரசாங்கத்தினால் இன்று வழங்கப்பட்டன. இவற்றின் பெறுமதி 750 மில்லியன் ரூபாவாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்