வர்த்தகர்கள் தலைதூக்க முடியாதளவிற்கு அரசாங்கம் அனைத்திலும் வரியை சுமத்தியுள்ளது: கோட்டாபய ராஜபக்ஸ

by Staff Writer 26-09-2019 | 8:07 PM
Colombo (News 1st) பொதுஜன பெரமுனவின் வர்த்தக தேசிய மாநாடு கொழும்பில் இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவின் வருகையை அடுத்து, இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது. நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபாய ராஜபக்ஸ, 2001 ஆண்டின் பின்னர் இலங்கையில் குறைந்தளவான பொருளாதார வளர்ச்சி வீதமே பதிவாகியுள்ளதாகவும் இந்த வருடத்தில் ஆப்கானிஸ்தானைவிட குறைந்தளவான பொருளாதர வளர்சியே பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டார். வர்த்தகர்கள் தலைதூக்க முடியாதளவிற்கு அரசாங்கம் அனைத்திலும் வரியை சுமத்தியுள்ளதாக கோட்டபாய ராஜபக்ஸ குற்றம் சுமத்தினார்.
எதிர்கால பொருளாதார முகாமைத்துவ தந்திரோபாயங்களை நாங்கள் தயாரித்துள்ளோம். அன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினை நிர்மாணித்த போது எங்களிடம் முறையான திட்டமிருந்தது. அதனூடாக இலங்கையை பொருளாதார கேந்திர நிலையமாக மாற்ற முடியும். அந்த திட்டத்திற்காகத்தான் நாங்கள் அன்று கடன் பெற்றோம். எதிர்காலத்தில் கொழும்பு, கட்டுநாயக்க, மத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டையை அண்மித்து அனைத்து வசதிகளுடனும் கூடிய இரு நிறுவனங்களை ஸ்தாபிக்க முடியும்
என அவர் மேலும் கூறினார். பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவும் மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதன்போது, மத்திய வங்கியை நண்பகலில் கொள்ளையடித்தமையால் வட்டி வீதம் அதிகரித்ததாகவும் இதனால் கொழும்பு கோட்டையிலுள்ள நான்கு வர்த்தகர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டார்.