ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பால் மக்கள் அசௌகரியம்

by Staff Writer 26-09-2019 | 7:50 AM
Colombo (News 1st) ரயில்வே தொழிற்சங்கங்கள் நேற்று (25) நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்களைச் சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்துள்ளார் தொழிற்சங்க நடவடிக்கையால், இன்று (26) காலை பயணிக்கவிருந்த அலுவலக ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன. அனைத்து தபால் ரயில்களின் சேவைகளும் நேற்று இரவு முதல் இரத்து செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில்வே ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியத்தைத் தடுக்கும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று 18ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமது பிரச்சினைக்காக உரிய தீர்வு கிடைக்கும் வரை தொடர்ச்சியாக பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்கவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையை கருத்தில் கொண்டு இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தமது தொழிற்சங்க நடவடிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை அரச நிர்வாக சேவைகள் சங்கத்தின் தலைவர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.