ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச தெரிவு

by Bella Dalima 26-09-2019 | 4:02 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டம் தற்போது கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரைப் பெயரிடுவதற்காக, செயற்குழுவின் விசேட கூட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமானது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கூட்டம் நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை களமிறக்குவதற்கான பிரேரணையை கட்சியின் தலைவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்தார். இதன் அடிப்படையில், பிரேரணைக்கு செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக விருப்பம் தெரிவித்துள்ளனர். கட்சியின் யாப்பிற்கு அமைவாக, இத்தீர்மானத்தை சம்மேளனக் கூட்டத்தில் அறிவிக்க உள்ளதாக அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தனது ட்விட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தமது கட்சியின் வேட்பாளருக்கு தற்போது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். கட்சி தலைமையக வாசலில் கூடியிருந்த ஆதரவாளர்கள் ஆரவாரத்தில் ஈடுபட்டனர்.   சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணம் இலங்கையின் இரண்டாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஏக புதல்வரான சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணம், கஷ்டப்பிரதேசமான ஹம்பாந்தோட்டையில் 1990 களில் ஆரம்பமானது. 2000 ஆம் ஆண்டு நாட்டிலேயே அதிக வாக்கு வீதத்தை ஹம்பாந்தோட்டையில் வெற்றிகொண்டு அவர் பாராளுமன்றத்தில் காற்தடம் பதித்தார். 2001 ஆம் ஆண்டு சுகாதார பிரதி அமைச்சராக மக்கள் சேவையில் அர்ப்பணிப்பு செய்த சஜித் பிரேமதாச, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவும் தனது பொறுப்புக்களை நிறைவேற்றினார். தற்போதைய அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சை பொறுப்பேற்றதன் பின்னர், தனது தந்தையின் வீடமைப்பு எண்ணக்கருவை மேலும் விரிவுபடுத்தி முன்னெடுத்துச்சென்ற அவர், இதுவரையில் 288 புதிய கிராமங்களை மக்களிடம் கையளித்துள்ளார். மதஸ்தலங்களுக்கான உதவித் திட்டங்கள், அறநெறி பாடசாலைகளுக்கான உதவித் திட்டங்கள், வறிய மக்களுக்கான நிவாரணத் திட்டங்கள் என அனைத்து இன மக்களுக்காகவும் அவர் சிறப்பான சேவையை ஆற்றி வருகின்றார். கலாசார அமைச்சை பொறுப்பேற்ற பின்னர், அனைத்து மதங்களுக்கும் கலாசாரத்திற்கும் தனது திட்டங்களின் ஊடாக பாரிய சேவைகளை ஆற்றி வருகிறார் அமைச்சர் சஜித் பிரேமதாச. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாசவின் பெயரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட கட்சியிலுள்ள சிலரின் எதிர்ப்பு காரணமாக அமைந்தது.      

ஏனைய செய்திகள்