பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை: ஆசிரியர்கள் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கை

பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை: ஆசிரியர்கள் நாளையும் தொழிற்சங்க நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2019 | 8:28 pm

Colombo (News 1st) ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டது

கொழும்பில் எதிர்ப்பு நடவடிக்கையிலும் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் ஈடுபட்டனர்.

கொழும்பு – கோட்டையில் ஆரம்பமான எதிர்ப்புப் பேரணியில், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட ஆசிரியர், அதிபர் தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தன.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட சில பிரச்சினைகளுக்கான தீர்வை வழங்குமாறு கோரி அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அவர்கள் லோட்டஸ் வீதி ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி பயணிக்க முயன்ற போதிலும், அதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் சிலருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்குள் செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.

அவர்கள் மீண்டும் வருகை தரும் வரை, சுமார் ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியில் காத்திருந்தனர்.

ஜனாதிபதி செயலாளருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குவதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்த போதும், உதவி செயலாளரையே சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததாகவும் பேச்சுவார்த்தை வெற்றியளிக்கவில்லை எனவும் இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் அடுத்த வாரத்திற்குள் உறுதியான முடிவு தராத பட்சத்தில், 5 நாட்களுக்கு பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட தொழிற்சங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் இன்று முன்னெடுத்த சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையினால் நாட்டின் பெரும்பாலான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்