பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது: சட்ட மா அதிபர்

பூஜித் ஜயசுந்தர, ஹேமசிறி பெர்னாண்டோவிற்கு மன்னிப்பு வழங்க முடியாது: சட்ட மா அதிபர்

எழுத்தாளர் Staff Writer

26 Sep, 2019 | 8:48 pm

Colombo (News 1st) ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு எவ்வித மன்னிப்பையும் வழங்க முடியாது என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா உயர் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இவர்கள் பாரதூரத்தன்மையை பொருட்படுத்தாது செயற்பட்டதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொடுக்கப்பட்டதாகவும் அதிகளவிலானவர்கள் நிரந்தர அங்கவீனர்களாகியதாகவும் சட்ட மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளரின் வழிகாட்டலின் பேரில், புலனாய்வு அதிகாரிகள் உயிரை பணையம் வைத்து சேகரித்த தகவல்களை ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் உதாசீனம் செய்துள்ளதாகவும் சட்ட மா அதிபர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

90,000-இற்கும் மேற்பட்டவர்களுக்கு தலைமைத்துவம் வழங்க வேண்டிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபரைப் போன்ற அதிகாரிகள் தபாற்காரராக மாறாது நடைமுறை ரீதியில் செயற்பட வேண்டும் என சட்டமா அதிபர் இன்று உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

எனினும், மக்களின் துரதிர்ஷ்டம் காரணமாக அது அவ்வாறு நிகழவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருந்த குறித்த இரண்டு அதிகாரிகளும் இழைத்த குற்றம் மிகவும் பாரதூரமானது என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் அவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

பயங்கரவாத தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உறுதியான புலனாய்வுத் தகவல் கிடைத்ததன் பின்னரும் அது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர். பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அல்லது அமைச்சரவையின் எந்தவொரு அமைச்சருக்கும் அறிவிக்க முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அல்லது பூஜித் ஜயசுந்தர ஆகியோர் நடவடிக்கை எடுக்கவில்லை என சட்ட மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்