மழை வீழ்ச்சி குறையும் சாத்தியம்: 80,000 பேர் தொடர்ந்தும் பாதிப்பு

by Staff Writer 25-09-2019 | 8:35 PM
Colombo (News 1st) பலத்த மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது. தற்போது நிலவும் மழையுடனான வானிலை நாளைய தினத்துடன் குறைவடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை அறிவித்தது. கொழும்பு நகரில் இன்று காலை முதல் பெய்த கடும் மழையினால் வாகன நெரிசல் ஏற்பட்டது. சில பகுதிகள் தொடர்ந்தும் நீரில் மூழ்கியுள்ளன. காலி - பத்தேகம - நாகொடை வீதி மற்றும் பத்தேகம ஹிக்கடுவ பழைய வீதி ஆகியன நீரில் மூழ்கியதுடன், பத்தேகம ஆண்கள் கல்லூரியின் ஆரம்பப் பிரிவின் ஒரு பகுதியில் வௌ்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாபலகம பிரதேசத்திலுள்ள பல வீதிகளும் நாகொடை - பழைய தானாயம்கொட, புதிய தானாயம்கொட மற்றும் முலன ஆகிய பிரதேசங்களின் தாழ்நிலப்பகுதிகளும் குறுக்கு வீதிகளும் நீரில் மூழ்கிக் காணப்பட்டன. காலி - பத்தேகம வீதியின் ஒலுவாகொட பிரதேசம் சுமார் மூன்று அடி அளவில் நீரில் மூழ்கியுள்ளது. மாத்தறை - அகுரஸ்ஸ, அதுரலிய, திஹகொட ஆகிய பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்வதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் கூறினர். மாத்தறை - வெலிகம, தெனிபிட்டிய, கல்கடுவ, இல்வத்த, தலல்ல, கொக்மாதுவ மற்றும் வெலிபிட்டிய ஆகிய பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளன. பலத்த மழை காரணமாக தெற்கு அதிவேக வீதியின் கொக்மாதுவ நுழைவாயில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. குகுலே கங்கை பெருக்கெடுத்தமையால் களுத்துறை, புலத்சிங்கள, வரக்காகொட வீதியின் தியகடுவ பிரதேசம் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. களு கங்கை, கிங் கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகியவற்றின் நீர்மட்டம் தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக நீர்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை நாளை காலை 10 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லிமீட்டர் வரை மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மத்திய, வடமேல் மாகாணங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (26) மற்றும் நாளை மறுதினம் (27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார். மேல் மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை மற்றும் நாளை மறுதினம் வழமை போன்று இடம்பெறும் என மேல் மாகாண கல்வி பணிப்பாளர் ஶ்ரீலால் நோனிஸ் தெரிவித்துள்ளார். இதேவேளை, நிவாரண நடவடிக்கைகளுக்காக 12 மில்லியன் ரூபா நிதி அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ளதாக, பொது நிர்வாக, அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.