ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க சில நிபந்தனைகள்: எதற்கும் உடன்படவில்லை என்கிறார் சஜித்

by Staff Writer 25-09-2019 | 9:10 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் களுத்துறை மாவட்டத்திற்கான பொதுக்கூட்டம் மத்துகம பொது மைதானத்தில் இன்று நடைபெற்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவை வரவேற்பதற்காக பதுளை, மாத்தறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களின் பின்னர் நான்காவது பொதுக்கூட்டமாக இன்றைய கூட்டம் நடைபெற்றது. "சஜித் வருகிறார்" என பெயரிடப்பட்டிருந்த இந்த பொதுக்கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டிருந்தனர். கூட்டம் நடைபெற்ற மைதானத்திற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர். சர்வமத ஆசிர்வாதத்துடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. இதன்போது, சஜித் பிரேமதாச பின்வருமாறு உரையாற்றினார்.
சஜித் பிரேமதாச யாருடைய கைப்பொம்மையும் அல்ல. சஜித் பிரேமதாசவிற்கே சொந்தமான அடையாளம் காணப்படுகின்றது. எனது நடவடிக்கைகளை வழிநடத்துவது வேறு யாருமல்ல, என்னுடைய மனச்சாட்சியே என்னை வழிநடத்துகின்றது. நிபந்தனைகளுடனான அரசியல் பயணத்திற்கு சஜித் பிரேமதாச ஒருபோதும் தயாரில்லை என்பதை இந்த சந்தர்ப்பத்தில் தெளிவாகக் கூறுகின்றேன். ஜனாதிபதி பதவியை விட பாரிய விடயமொன்று எனக்குள்ளது. அதுவே என்னுடைய சுய கௌரவம். ஜனாதிபதி பதவிக்கல்ல, அரசராகுவதற்கேனும் சஜித் பிரேமதாச தமது ஆன்மாவை, சுய கௌரவத்தை, நாட்டை, தேசத்தை, தாய் பூமியை, பிரஜைகளை தாரைவார்க்க மாட்டேன் என்பதனை கூற விரும்புகிறேன். எனக்கு பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. பல வருடங்களாக மக்கள் சேவையில் ஈடுபட்டு நான் தற்போது பதப்பட்டுள்ளேன் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்வது சிறந்தது. யார் எவ்வாறான துரோகமிழைத்தாலும் இம்முறை நாட்டை கட்டியெழுப்பும் சஜித் பிரேமதாசவின் பயணத்தை எவராலும் நிறுத்த முடியாது.
இதேவேளை, சஜித் பிரேமதாசவை வேட்பாளராகக் களமிறக்குவதற்கு கட்சித்தலைவர் சில விடயங்களின் அடிப்படையில் இணங்கியுள்ளதாக தகவல் வெளியானது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் அலரி மாளிகையில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார். எந்தவொரு நிபந்தனைக்கும் அடிபணியப் போவதில்லை என சஜித் பிரேமதாச இதன்போது கூறினார்.