இன்று நள்ளிரவு முதல் ரயில்வே தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு

by Staff Writer 25-09-2019 | 9:24 PM
Colombo (News 1st) இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே அரச ஊழியர் தொழிற்சங்கங்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. சாரதிகள், கட்டுப்பாட்டாளர்கள், பாதுகாவலர்கள் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் சம்பள முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு இன்று முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில் என்ஜின் சாரதிகள் சங்கத்தின் தலைவர் இந்திக்க தொடங்கொடகே தெரிவித்தார். வாரத்திற்கு 5 நாட்கள், சீருடை கொடுப்பனவை அதிகரித்தல், மேலதிகக் கொடுப்பனவை அதிகரித்தல், மாற்றீடு ஊழியர்களுக்கான நிரந்தர நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து 22 தரங்களைச் சேர்ந்த சுகாதார ஊழியர்களும் இன்று நான்கு மணித்தியாலம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக தேசிய வைத்தியசாலை, தேசிய கண் வைத்தியசாலை உள்ளிட்ட முக்கிய வைத்தியசாலைகளுக்கு இன்று முற்பகல் சென்ற நோயாளர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர். இதேவேளை, பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற நேரத்தில் தேசிய கண் வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் மற்றும் ஊழியர்களை ஔிப்பதிவு செய்த பெண் ஒருவரை வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். அனுராதபுரம், கம்பளை, புத்தளம் ஆகிய பகுதிகளிலுள்ள வைத்தியசாலைகளிலும் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர் சங்கம் ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்தது. இதனால் மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்களின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்பட்டிருந்தது. பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்கள் கடந்துள்ளன. இதனால் இன்றும் எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் கற்றல் செயற்பாடுகள் இடம்பெறவில்லை. வேலையில்லா பட்டதாரிகள் இன்று முற்பகல் காலி முகத்திடலில் ஒன்றுகூடி தொழில் வாய்ப்புக்களை பெற்றுத்தருமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.