பூஜித் ஜயசுந்தர தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: நீதியரசர்கள் குழாம் கேள்வி

பூஜித் ஜயசுந்தர தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: நீதியரசர்கள் குழாம் கேள்வி

பூஜித் ஜயசுந்தர தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்: நீதியரசர்கள் குழாம் கேள்வி

எழுத்தாளர் Staff Writer

25 Sep, 2019 | 10:22 pm

Colombo (News 1st) சஹ்ரான் ஹசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகள் தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்தவுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் பல நாட்களாக எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், ஏப்ரல் 21 ஆம் திகதி தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைக்கு காரணம் என்ன என பூஜித் ஜயசுந்தரவின் சட்டத்தரணியிடம் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஏழு பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் இன்று கேள்வி எழுப்பியது.

தாக்குதல்களை தடுக்கத் தவறிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு சட்ட மா அதிபருக்கு கட்டளையிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்டிருந்த 12 அடிப்படை உரிமை மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே நீதியரசர்கள் குழாம் இந்த விடயத்தை வினவியது.

தாக்குதல்கள் தொடர்பில் உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அரச புலனாய்வு சேவை பணிப்பாளர் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் காலை வேளைகளில் தொலைபேசி ஊடாக வழங்கிய அறிவுறுத்தலுக்கு அமைய அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளையும் அறிவுறுத்தி உரிய பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிட்டிருந்தால், தாக்குதல்களை மட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இருந்ததாக நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

புலனாய்வுத் தகவல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்து உத்தியோகத்தர்களுக்கு கடிதம் அனுப்புவதுடன் நின்று விடாது, தாக்குதல்களை தடுப்பதற்கு நேரடி நடவடிக்கை எடுப்பதும் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் பொலிஸ் மா அதிபர் போன்ற பொறுப்பான பதவியிலுள்ள ஒருவருடைய கடமையும் பொறுப்பும் அல்லவா என நீதியரசர்கள் வினவியுள்ளனர்.

மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க சபையின் தேவாலயங்களுக்கு பொறுப்பாகவுள்ள அருட்தந்தையர்களை ஏதேனும் ஒரு வகையில் தௌிவுபடுத்த வேண்டியிருந்ததாகவும் நீதியரசர்கள் குழாம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிரடிப்படை போன்ற விசேட பிரிவுகளுக்கு பொறுப்பான அதிகாரிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை பயன்படுத்தி குறித்த இடங்களின் பாதுகாப்பை உறுத்திப்படுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு இயலுமை இருந்ததாக நீதியரசர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், குறித்த புலனாய்வு தகவல்கள் தமது தரப்பிற்கு கிடைத்ததை ஏற்றுக்கொள்வதுடன், உறுதியாக தாக்குதல் நடத்தப்படும் இடங்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் அறியாதிருந்ததால், அந்த புலனாய்வுத் தகவல்களை அனைத்து தரப்பினருக்கும் அம்பலப்படுத்துவது ஏற்புடையது அல்லவென கருதியதால் பூஜித் ஜயசுந்தர இவ்வாறு செயற்பட்டதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இத்தகைய தாக்குதல்களைத் தடுப்பது தொடர்பில் பூஜித் ஜயசுந்தரவை விட தௌிவுள்ள, பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட நான்கு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு புலனாய்வுத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த மனுக்கள் மீதான மேலதிக விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்