by Staff Writer 24-09-2019 | 2:24 PM
Colombo (News 1st) தென்மேல் பருவப்பெயர்ச்சி காரணமாக நாட்டின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாக மக்களின் இயழ்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக வீதிகள் மற்றும் தாழ்நிலப் பகுதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சியாக கட்டுநாயக்க பகுதியில் 219 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
காலி - வந்துரம்ப பகுதியில் 175 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் காலி - ஹியாரே பகுதியில் 172 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
நிலவும் மழையுடனான வானிலையால் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பின் நிமித்தம் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன தெரிவித்துள்ளார்.
காலி மாவட்டத்தில் 1000 இற்கும் அதிகமானோர் மின்சாரத் துண்டிப்பால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாத்தறை மாவட்டத்தில் 7000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பலத்த மழையினால் கொழும்பின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆமர் வீதி, கொட்டாஞ்சேனை ஜிந்துபிட்டி சந்தி, புளூமெண்டல் ஜோர்ஜ் ஆர் டி சில்வா சந்தி, ஜேத்தவன வீதி, பேஸ்லைன் வீதி, ரொபர்ட் குணவர்தன சந்தி மற்றும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்தின் சில பகுதிகள் நீரில் மூழ்கின.
இதனால் அப்பகுதிகளில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அத்துடன், நிலவும் மழையுடனான வானிலையால் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நியாகம, நாகொட, இமதுவ, பத்தேகம ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காலி, நெலுவ, தவளம ஆகிய செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள, வலல்லாவிட்ட, மத்துகம, அகலவத்த ஆகிய பகுதிகளுக்கும் மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
தொடங்கொட, இங்கிரிய, பாலிந்தநுவர ஆகிய செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் யட்டியந்தொட்டை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், தெஹியோவிட்ட பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை - பிட்டபெத்தர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையும் இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு முதலாம் கட்ட எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவித்துள்ளது.
இதனால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொத்தல, அமுகொட பகுதியில் மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர்.
சிறுமியொருவரும் 2 பெண்களும் சம்பவத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்டேு சரிந்து வீழ்ந்ததால், வீடு மற்றும் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லொறியொன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கிங் கங்கை பெருக்கெடுத்ததால் பத்தேகம, கோனபொல பகுதிகளில் 65 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாக நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நில்வளா, களு மற்றும் கிங் கங்கைகளின் நீர்மட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த கங்கைகளின் இரு மருங்கிலும் வாழும் மக்களை அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
பலத்த மழை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பலத்த மழை காரணமாக காலி மாவட்டத்தில் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 2443 குடும்பங்களை சேர்ந்த 9592 பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக மாவட்ட செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை மாவட்டத்தில் 500 குடும்பங்களை சேர்ந்த 2000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாத்தறை மாவட்ட செயலாளர் பிரதீப் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் பலத்த மழை காரணமாக ஏற்பட்ட வௌ்ளத்தினால் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் 12 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காலி மாவட்டத்தில் 9 வீடுகள் முழுமையாகவும் 63 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
மாத்தறை மாவட்டத்தில் 3 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் 105 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
நிலவும் மழையுடனான வானிலையால் ஏற்படும் பாதிப்புகளுக்கான நிவாரண சேவைகளை முன்னெடுப்பதற்காக 15 இலட்சம் ரூபா நிதி, மாவட்ட செயலகங்களுக்கு பகிர்தளிக்கப்பட்டுள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நிவாரண சேவை நடவடிக்கைகளுக்கு முப்படையினர் அந்ததந்த பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அனர்த்த நிவாரண சேவை நிலையம் தெரிவித்துள்ளது.
அதேநேரம், மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 200 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது
அத்துடன் வடக்கு, கிழக்கு, வட மேல் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதேவேளை, 2019 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான செயன்முறை பரீட்சைகள் இன்று நடைபெறுகின்றன.
எனினும், நிலவும் மழையுடனான வானிலையால் வௌ்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களுக்கு உள்ளான மாணவர்களுக்காக, பிறிதொரு நாளில் செயன்முறை பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ புஜித தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து சிக்கல்கள் காணப்படுமாயின், 1911 என்ற துரித தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.