by Staff Writer 24-09-2019 | 11:31 AM
Colombo (News 1st) இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை இல்லாதொழிப்பதே தமது இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 42ஆவது கூட்டத்தொடரில் உரையாற்றும்போதே அவர் இனைத் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் காசநோய் தாக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதன்மையிலுள்ளது.
அதேபோன்று, பல வகையான போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளவர்கள் வாழும் நாடுகளின் பட்டியலிலும் இந்தியா முதல் 5 இடங்களில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை காசநோய் அற்ற நாடாக பிரகடனப்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் கத்தார் இளவரசர் ஷெய்க் தமிம் பின் ஹமாட் அல் தானியை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, அண்மையில் இந்தியாவில் Electronic Cigarette மீது தடை விதிக்கப்பட்டமையையும் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
உலகளாவிய ரீதியில் புகைபிடிப்பவர்கள் அதிகம் வாழும் நாடுகளின் பட்டியலில் சீனா முதலிடத்திலும் இந்தியா இரண்டாமிடத்திலும் உள்ளது.
இந்தியாவில் 106 மில்லியன் பேர் புகைப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளமை அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.