பாகிஸ்தானுக்கு எதிரான தொடர்: இலங்கைக் குழாம் பயணம்

by Staff Writer 24-09-2019 | 2:11 PM
Colombo (News 1st) பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கைக் குழாம் இன்று (24) காலை அந்நாட்டுக்கு பயணமானது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் 3 சர்வதேச ஒருநாள் மற்றும் 3 சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளன. இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள லஹிரு திரிமான்ன தலைமையிலான ஒருநாள் அணியும் தசுன் சானக்க தலைமையிலான இருபதுக்கு 20 அணியும் பாகிஸ்தானுக்கு பயணமானது. இதன்போது கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற மத அனுஷ்டானங்களில் இலங்கை அணி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 2009 ஆம் ஆண்டு இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு பின்னர் சர்வதேச தொடர் ஒன்றுக்காக 2 வாரங்களுக்கு மேல் சர்வதேச அணியொன்று பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்யும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். எவ்வாறாயினும், திமுத் கருணாரத்ன, லசித் மாலிங்க, குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, ஏஞ்சலோ மெத்தியூஸ், குசல் மெண்டிஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி இந்தத் தொடரிலிருந்து விலகியுள்ளனர். தனுஷ்க குணதிலக்க, சதீர சமரவிக்கிரம, அவிஷ்க பெர்னாண்டோ, ஓசத பெர்னாண்டோ, ஷெஹான் ஜயசூரிய, தசுன் சானக்க, மினோத் பானுக்க, ஏஞ்சலோ பெரேரா, வனிந்து ஹசரங்க லக்‌ஷான் சந்தகேன், நுவன் பிரதீப், இசுரு உதான, கசுன் ராஜித்த மற்றும் லஹிரு குமார ஆகிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்காக விளையாடவுள்ளனர். சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை குழாத்தில் இரு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஒருநாள் அணித்தலைவரான லஹிரு திரிமான்னவிற்குப் பதிலாக சர்வதேச அறிமுகம் பெறாத சானுக்க ராஜபக்‌ஷ இருபதுக்கு 20 தொடரில் விளையாடவுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் விளையாடிய லஹிரு மதுஷங்கவுக்கும் இந்தத் தொடரில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதியும் இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் 5ஆம் திகதியும் ஆரம்பமாகவுள்ளது.
சம பலம் பொருந்திய அணியொன்று கிடைத்துள்ளது. இளம் வீரர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். எம்மால் சிறந்த போட்டியொன்றை வழங்கி வெற்றியீட்ட முடியும். சிரேஷ்ட வீரர்களின் தனிப்பட்ட முடிவுகளுக்கு தலைவணங்கி, தற்போதுள்ள அணியைக் கொண்டு எவ்வாறு வெற்றியீட்டுவது என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு மிகப்பெரியதொரு சந்தர்ப்பமாகும். இவ்வாறானதொரு சந்தர்ப்பம் இலகுவில் கிடைக்காது. எனவே திறமையை வெளிப்படுத்தி தம்மை நிரூபிப்பதற்கான சிறந்த வாய்ப்பே இந்த தொடராகும். கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் பாதுகாப்பு தொடர்பில் எம்முடன் முதலில் கலந்துரையாடினர். பாதுகாப்பு எவ்வாறு வழங்கப்படும் என 30 வீரர்களுக்கும் தௌிவுபடுத்தியுள்ளனர்
என இலங்கை ஒருநாள் அணியின் தலைவர் லஹிரு திரிமான்னே தெரிவித்துள்ளார்.
சிறந்த முறையில் தயாராகியுள்ளோம். 4 வீரர்கள் மாத்திரமே இருபதுக்கு 20 தொடரிலிருந்து விலகியுள்ளனர். அணித்தலைவர் என்ற ரீதியில் என்னுடைய அணி மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. இருபதுக்கு 20 அரங்கை பொருத்தமட்டில் பாகிஸ்தான் முதற்தர அணி. எமது அணியில் இளம் வீரர்கள் இருக்கின்றனர். அவர்கள் தொடர்ச்சியாக திறமைகளை வெளிப்படுத்தியவர்கள். எனினும் வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்தத் தொடர் இளம் வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பாக அமையும். குறிப்பாக மீனோத் பானுக்க, பானுக்க ராஜபக்‌ஷ உள்ளிட்ட வீரர்கள் தேசியமட்ட ​போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி சாதித்தவர்கள். ஏற்கனவே நான் பாகிஸ்தானுக்கு சென்றுள்ளேன். அவர்களிடம் சிறந்த பாதுகாப்புத் திட்டம் இருக்கின்றது. அணித்தலைவர் என்ற ரீதியில் இலங்கை அணியை பாகிஸ்தானுக்கு அழைத்து செல்வதில் திருப்தியடைகிறேன்
என இலங்கை இருபதுக்கு 20 அணியின் தலைவர் தசுன் சானக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, உண்மையில் தொடருக்கு தயாராகியுள்ளோம். தொடரை எதிர்கொள்வதற்கான சிறந்த மனநிலையில் உள்ளோம். 10 வீரர்கள் இல்லை என்பதை கவனத்திற்கொள்ளாது தற்போதுள்ள அணியைக் கொண்டு சிறந்த முறையில் விளையாட முடியும். குறிப்பிட்ட சந்தர்ப்பத்தை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதனைத் தவறவிட்டு கவலைப்படுவதில் பயன் இல்லை
என இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநர் ரொமேஷ் ரத்நாயக்க கூறியுள்ளார்.