தொடரும் கனமழை: வீடுகளுக்குள் வௌ்ள நீர், வீதிகள் மூழ்கின

by Staff Writer 24-09-2019 | 9:12 PM
Colombo (News 1st) எதிர்வரும் 36 மணித்தியாலங்களுக்கு கடும் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், தென் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் சில இடங்களில் 200 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு நகர் மற்றும் அதனை சூழவுள்ள பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். ஜயவர்தனபுர பாராளுமன்ற கட்டடத் தொகுதியை சூழவுள்ள தியவன்னா ஓயாவின் நீர் மட்டமும் தற்போது உயர்வடைந்துள்ளது. கொழும்பில் இன்று சுமார் 67 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்றைய தினம் கொழும்பு மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்தது. கொட்டாஞ்சேனை ஆமர் வீதி, பாபர் வீதி, ப்ளூமெண்டல் வீதி, புனித ஜேம்ஸ் வீதி, கோட்டை ரெக்லமேஷன் வீதி, ஜிந்துப்பிட்டி சந்தி மற்றும் கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள வீதி ஆகிய இடங்களில் வெள்ளம் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொழும்பு நகரின் பல்வேறு இடங்களில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. நகரூடாகக் காணப்படும் பெரும்பாலான வடிகாண்கள் நிரம்பிய நிலையில், தாழ்நிலப் பகுதிகளும் நீரில் மூழ்கின. கொழும்பு நகரின் சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் மிகுந்த அசௌகரியங்களை எதிர்நோக்கினர். அசுத்தமான நீர் வடிகாண்களிலிருந்து வெளியேறியமையால், சுகாதாரப் பிரச்சினைகளும் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் தாழ்நிலங்களில் இன்று மாலை வெள்ளம் ஏற்பட்டது. கெரவலப்பிட்டிய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளால் நீர் வடிந்தோடாமை காரணமாக, வத்தளை பிரதேசத்தின் சில இடங்களில் வௌ்ள நீர் தேங்கிக் காணப்பட்டது. தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு நகரின் சில இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில இடங்களில் வீடுகளிலும் வெள்ள நீர் புகுந்துள்ளதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நீர்கொழும்பு - தளுபத்த, கட்டுவ, பெரியமுல்ல, கட்டுவாப்பிட்டிய உட்பட பல பிரதேசங்களின் தாழ்நிலங்களில் நீர் தேங்கியுள்ளது. பெரியமுல்ல - தெனியாய வத்தையில் 190 குடும்பங்களும் செல்லக்கந்த பிரதேசத்தில் 40 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். பெரியமுல்ல ஜயரத்ன வீதியில் உள்ள ரப்பர்வத்தை, கோமஸ்வத்தை ஆகிய பிரதேசங்களில் 300 குடும்பங்கள் வரை அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளன. நீர்கொழும்பு - மீரிகமை பிரதான வீதியில் கட்டுவாப்பிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அந்த வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தற்காலிகமாகத் தங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். கட்டான - ரப்பர்வத்த, கோமஸ்வத்த ஆகிய பகுதிகளில் சுமார் 300 குடும்பங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் தற்போது அந்தப் பகுதியிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். நீர்கொழும்பு - மீரிகம பிரதான வீதியின் மஹஹூணுபிட்டிய பகுதியில் வெள்ளம் ஏற்பட்டமையால், கட்டுநாயக்க - நீர்கொழும்பு பிரதான வீதியில் சுமார் இரண்டு அடியளவில் வெள்ளநீர் தேங்கியிருந்தது. எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல பகுதியில் வீதியில் கற்பாறைகள் சரிந்து வீழும் அபாயம் நிலவுகின்றது. இதேவேளை, இராவணா எல்ல நீர் வீழ்ச்சி அமைந்துள்ள பிரதேசத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். எவ்வாறாயினும், இன்றும் அங்கு சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது. சீரற்ற வானிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். பத்தேகம பகுதியில் கிங் கங்கை பெருக்கெடுத்தமையால் பத்தேகம காலி, பத்தேகம - நாகொட மற்றும் பத்தேகம - அகலிய வீதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பத்தேகம, வெலிவிட்டிய திவிதுல, காலி - பத்தேகம வீதி, காலி - வக்கவெல்ல, காலி - மாபலகம, வந்துரம்ப - யக்கல முல்ல வீதிகளின் சில இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கோனபுர பகுதியில் 65 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. மாத்தறை மாவட்டத்தின் மாலிம்பட, அத்துரலிய, பலகொவல, கத்தூவ, வெலிகம, கொக்மாதுவ, பலல்ல, ஜீ வத்த, தெனிபிட்டிய மற்றும் மிரிஸ்ஸ ஆகிய இடங்களிலும் வெள்ளம் தேங்கியுள்ளது. இதன் காரணமாக ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். மாத்தறை - அக்குரஸ்ஸ தடுப்பணை நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, தென் மாகாணத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வாழும் அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் தலா 10 இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாகாண ஆளுநர் ஹேமால் குணசேகர,பிரதம செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கமைய, எதிர்வரும் தினங்களில் அந்த பிரதேச செயலகங்களுக்கு அந்த நிதி வழங்கப்படவுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் பல இடங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குகுலே கங்கையின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது. மகுரு கங்கை பெருக்கெடுத்தமையினால் மத்துகமை - கலவான வீதி பதுரலிய - மிதெல்வல பகுதியில் முழுமையாக நீரில் மூழ்கியது. களு கங்கையின் மில்லேகந்த நீர் அளவைமாணி பொருத்தப்பட்டுள்ள பகுதி, வெள்ள அபாய நிலையை அண்மித்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார். கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பகுதிகளில் பெய்துவரும் அதிக மழை காரணமாக 'கிரம ஓயாவும் பெருக்கெடுக்க ஆரம்பித்துள்ளது. இதனால், தங்காலை - வீரகெட்டிய பிரதான வீதி நீரில் மூழ்கியது. இதேவேளை, நில்வலா மற்றும் கிங் கங்கை ஆகியவற்றின் நீர் மட்டம் மேலும் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஆறுகளின் இரு மருங்கிலும் வாழும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களின் சில பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவு சிரேஷ்ட புவிச்சரிதவியல் நிபுணர் கலாநிதி காமினி ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். இந்நிலையில், இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய மழைவீழ்ச்சி கட்டுநாயக்கவில் பதிவாகியுள்ளது. அங்கு 219 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது. குறித்த காலப்பகுதியில், காலி - வந்துரம்ப பகுதியில் 175 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காலி - ஹியாரே பகுதியில் 172 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. சீரற்ற வானிலையால் 5 மாவட்டங்களில் 12,109 குடும்பங்களைச் சேர்ந்த, 48,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். காலி, மாத்தறை, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற வானிலையால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 22 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 282 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. 878 குடும்பங்களைச் சேர்ந்த 3,488 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டது. இதேவேளை, வெள்ளத்தில் சிக்கிய 18 பேரை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர். மேலும், இடம்பெயர்ந்துள்ள 417 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்றதாக கடற்படையினர் குறிப்பிட்டனர். அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு பொலிஸாரால் விசேட தொலைபேசி இலக்கங்கள் இரண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 011 25 87 225 மற்றும் 011 24 54 576 ஆகிய இலக்கங்களூடாக அனர்த்தங்கள் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் குறிப்பிட்டனர்.

ஏனைய செய்திகள்