திவாலான தாமஸ் குக்: 6 இலட்சம் பயணிகள் நிர்க்கதி

திவாலான தாமஸ் குக் நிறுவனத்தால் 6 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் நிர்க்கதி

by Bella Dalima 24-09-2019 | 5:33 PM
Colombo (News 1st) பிரிட்டனைச் சேர்ந்த தாமஸ் குக் என்ற பயண ஏற்பாட்டு நிறுவனம் திடீரென்று திவாலானதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற 6 இலட்சம் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர். கடந்த 178 ஆண்டுகளாக இயங்கி வந்த தாமஸ் குக் நிறுவனம் பெரும் கடன் சுமையில் தத்தளித்தது. இணையத்தளம் வாயிலாக சுற்றுலா ஏற்பாடு செய்து தரும் நிறுவனங்களாலும், ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக நிலவிய ஸ்திரமற்ற சூழலாலும் தாமஸ் குக் நிறுவனம் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து 200 மில்லியன் பவுண்ட்களை திரட்டினால் சமாளிக்க முடியும் என்ற நிலையில், அந்த நிறுவனம் இருந்தது. எனினும், அந்த நிதியைத் திரட்ட முடியாததால் தாமஸ் குக் நிறுவனம் நேற்று (23) அதிகாலையில் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அந்நிறுவனம் மூலம் பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்றுள்ள 6 இலட்சம் பயணிகள் நடுவழியில் சிக்கித் தவிக்கின்றனர். மேலும், தாமஸ் குக் நிறுவனத்தின் 22,000 ஊழியர்கள் ஒரே இரவில் வேலை இழந்துள்ளனர். இது தொடர்பாக தாமஸ் குக் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கணிசமான முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கும், புதிய முதலீட்டாளர்களுக்கும் இடையே உடன்பாட்டை ஏற்படுத்த முடியாமல் போய் விட்டது. எனவே நிறுவனத்தை உடனடியாகக் கலைத்து விட்டு திவாலானதாக அறிவிப்பது என்று இயக்குநர்கள் குழு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, தாமஸ் குக் நிறுவனம் கடந்த 2007-இல் மை டிராவல் நிறுவனத்துடன் இணைக்கப்பட்டதால் பெரும் கடன் சுமையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சுற்றுலாப் பயண ஏற்பாடு மட்டுமின்றி விமானச் சேவையும் நடத்தி வந்த தாமஸ் குக் நிறுவனம், தெற்கு ஐரோப்பா, மத்தியதரைக்கடல் நாடுகளுக்கு பெருமளவில் பயணிகளை அனுப்பி வந்தது. ஆசியா, வட ஆப்பிரிக்கா, கரீபியன் நாடுகளுக்கும் சுற்றுலா ஏற்பாடு செய்து கொடுத்து வந்தது. இந்நிலையில், அந்த நிறுவனம் மூலம் பல்கேரியா, கியூபா, துருக்கி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுலா சென்று நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தங்கள் நாட்டவர்கள் 1.5 இலட்சம் பேரை பத்திரமாக அழைத்து வருவதற்கு பிரிட்டன் அரசு அவசரத் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிரிட்டன் தனது சொந்த நாட்டினரைப் பெருமளவில் தாயகத்திற்கு மீட்டுக் கொண்டுவரும் நடவடிக்கையாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, இந்தியாவில் இயங்கி வரும் தாமஸ் குக் நிறுவனத்திற்கும் திவாலான நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.