கோட்டாபயவிற்கு யாழ். நீதிமன்றம் விடுத்த அழைப்பாணைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை

by Staff Writer 24-09-2019 | 7:39 PM
Colombo (News 1st) 27 ஆம் திகதி யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் காணாமற்போனமை தொடர்பிலான வழக்கு விசாரணைகளுக்காகவே கோட்டாபய ராஜபக்ஸவிற்கு ஆழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு காணாமற்போனமை தொடர்பில் முன்னெடுக்கப்படுகின்ற ஆட்கொணர்வு வழக்கில் சாட்சியமளிப்பதற்காக மன்றில் ஆஜராகுமாறு கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ். நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்திருந்தது. பாதுகாப்பு காரணங்களால் தம்மால் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாதென குறித்த ஆழைப்பாணைக்கு எதிராக கோட்டாபய ராஜபக்ஸ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அறிவித்திருந்தார். தேவை ஏற்பட்டால் வேறொரு பிரதேசத்தில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் சாட்சியமளிக்க தாம் தயார் எனவும் அவர் மன்றில் தெரிவித்துள்ளார். இந்த விடயங்களை கவனத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அழைப்பாணையை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை உடனடியாக யாழ். நீதவான் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, கோட்டாபய ரஜபக்ஸவின் மேன்முறையீடு மீதான விசாரணையை டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்குமாறு அறிவித்துள்ளார். இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஸ தாக்கல் செய்துள்ள மேன்முறையீடு தொடர்பிலான விசாரணைகளில் இருந்து விலகிக்கொள்வதாக நீதிபதிகள் குழாமில் அங்கம் வகித்த நீதிபதி அச்சல வெங்கப்புலி இன்று அறிவித்துள்ளார்.