உலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்

உலகத் தலைவர்களிடையே ஓங்கி ஒலித்த கம்பீரக் குரல்

by Bella Dalima 24-09-2019 | 4:29 PM
Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்தான மாநாட்டில் உரையாற்றிய 16 வயது சிறுமியான கிரேட்டா தன்பெர்க் (Greta Thunberg) உலகத் தலைவர்களிடம் கடுமையான தொனியில் கேட்ட கேள்விகள் பலரிடமும் திகைப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அவர் உலகத் தலைவர்களைப் பார்த்து,
நாங்கள் அனைவரும் உங்களை கவனித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அனைத்துமே தவறாக நடந்து கொண்டு இருக்கின்றன. நான் இங்கே இருக்கக்கூடாது. கடலுக்கு மறுபக்கம் உள்ள எனது பாடசாலையில் படித்துக்கொண்டு இருக்க வேண்டும். நீங்கள் என்னுடைய கனவு மற்றும் குழந்தைப் பருவத்தினை வெற்றுவார்த்தைகளால் திருடி விட்டீர்கள். ஆனாலும், நான் ஒரு அதிர்ஷ்டசாலி. பருவநிலை மாற்றத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர். நாம் அனைவரும் பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆனால் நீங்கள் பணம், பொருளாதார வளர்ச்சி போன்ற கற்பனை உலகத்தைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு துணிச்சல்? பருவநிலை மாற்றம் குறித்த அவசர நிலையை புரிந்துகொள்ள முடிகிறது என தலைவர்கள் கூறுகின்றனர். ஆனால், நான் அதை நம்பத் தயாராக இல்லை. நீங்கள் உண்மையிலேயே பருவநிலை மாற்றத்தை உணர்ந்து அதைத் தடுக்க முயற்சி மேற்கொள்ளாவிட்டால் நீங்கள் அனைவரும் மிகவும் அரக்கர்கள். ஆனால், நீங்கள் அவ்வாறு இருப்பீர்கள் என நான் நம்பவில்லை. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த எந்த திட்டமும், தீர்வும் இந்த கூட்டத்தில் ஐ.நா சபையால் சமர்ப்பிக்கப்படவில்லை. இன்றைய நிலையில் பருவநிலை மாற்றத்தின் அளவு மிகப்பெரியது. அதை கட்டுப்படுத்த ஐ.நா சபையோ அதன் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸோ இன்னும் முதிர்ச்சியடையவில்லை. நீங்கள் எங்களைத் தவறவிடுகின்றீர்கள். ஆனால், இளைய தலைமுறையினர் உங்கள் துரோகத்தை புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளோம். அடுத்த தலைமுறையின் பார்வை உங்கள் முன்தான் உள்ளது. நீங்கள் எங்களை தோல்வியடையச் செய்ய நினைத்தால், உங்களை நாங்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டோம்.
என கடுமையான தொனியில் தனது கருத்துக்களை கிரேட்டா தன்பெர்க் முன்வைத்துள்ளார். மெல்லிய குரலில் ஆரம்பித்த அவரது உரை, காகிதத்தில் எழுதி வைத்திருந்ததைப் படிக்க படிக்க ஓங்கி ஒலித்து கோபமும் உணர்ச்சிக் கொந்தளிப்புமாக மாறியது. அவர் பேசுவது தனக்காகவோ தனது நாட்டிற்காகவோ மாத்திரமில்லை, ஒட்டுமொத்த மனிதகுலத்திற்காகவும் தான் என்பதை அந்தக் குரலின் நடுக்கம் உணர்த்தியது. பருவநிலை மாற்றம் எனும் பாரிய கருப்பொருளை கையில் எடுத்துள்ள சிறுமி கிரேட்டா யார்? 16 வயதான கிரேட்டா தன்பெர்க் ஸ்வீடனைச் சேர்ந்த பாடசாலை மாணவி ஆவார். பருவநிலை மாற்றங்களால் உலகில் ஏற்படக்கூடிய அபாயங்கள் குறித்து தனது தொடர் பேச்சுக்களாலும் போராட்டங்களாலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் Climate Activist என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். பருவநிலை நெருக்கடிகளுக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு அரசியல்வாதிகள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய புவி வெப்பமடைதலிலிருந்து ஏற்படும் அபாயங்களைக் குறைக்க எதிர் நடவடிக்கை எடுக்கக் கோரி, கிரேட்டா தன்பெர்க் வௌ்ளிக்கிழமைகளில் பாடசாலை செல்லாமல் தினமும் ஸ்வீடிஷ் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடத் தொடங்கினார். உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து பலர் கிரேட்டாவிற்கு ஆதரவு தெரிவித்ததுடன், அவரது போராட்டத்தில் கைகோர்த்தனர். முதன்முறையாக ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு, தனது 15-ஆவது வயதில், ​​ஸ்வீடன் பாராளுமன்றத்திற்கு வெளியே பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தினார். அதுதான் பருவநிலை மாற்றத்திற்காக பாடசாலைக்கு செல்லப்போவதில்லை எனும் School Climate Strike Movement என்ற இயக்கம். கிரேட்டாவின் இந்த இயக்கம் விரைவில் பரவத்தொடங்கி அநேக மாணவர்கள் தங்கள் சமூகங்களில் இதேபோன்ற Fridays for Future (FFF) போராட்டங்களை நடத்த வித்திட்டது. கிரேட்டாவின் இந்த இயக்கம் இணையம் மூலம் பரவி பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. அதன் பின், உலக அரங்கில் சூழலியல் குறித்து பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றத் தொடங்கினார். எந்தவொரு தொடக்கமும் தன்னிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கிரேட்டா, இதை தனது பெற்றோரிடமும் வலியுறுத்தினார். பாடகியாக இருந்த தன் அம்மாவிடம் காற்று மாசு பற்றி விரிவாகக் கூறி, கரியமில வாயு அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதனால் அவரது தாயார் வெளிநாடுகளுக்கு விமானத்தில் செல்வதில்லை என்று முடிவெடுத்தார். கிரேட்டா தன்பெர்க்கும் பெரும்பாலும் கப்பலில்தான் பயணிக்கிறார். அவசர கால நிகழ்வுகளுக்காக மட்டுமே விமானம் ஏறுகிறார் இந்த இளம் போராளி. அமெரிக்காவின் நியூயார்க்கில் 2.5 இலட்சம் பேர் கலந்துகொண்ட மாபெரும் பேரணியில் கலந்துகொள்ள கிரேட்டா தன்பெர்க்கிற்கு அழைப்பு வந்தது. அவரும் அந்த நிகழ்வில் கலந்து கொண்டார். அந்நிகழ்வில் அவர்
படிப்பை விட்டுவிட்டு வீதியில் இறங்கி நாங்கள் போராடுவது மற்றவர்கள் எங்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு எங்கள் முயற்சிகளை பாராட்டுவதற்காக அல்ல. உலக நாடுகளின் தலைவர்கள் பருவ நிலை மாற்றம் குறித்து வலுவான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று தான் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஏனெனில், நமது அனைவருக்கும் பாதுகாப்பான எதிர்காலம் தேவைப்படுகிறது. எங்கள் இயக்கத்தைப் பார்த்து அஞ்சுவோர்க்கும் நாங்கள் கூறுவது ஒன்றுதான், இது வெறும் தொடக்கம் தான். நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் சரி, இல்லையென்றாலும் சரி மாற்றம் ஏற்படப்போவது உறுதி
என்று ஆணித்தரமாக தன் கருத்துக்களை முன்வைத்திருந்தார். தொடர் போராட்டங்களின் பலனாக மே 2019-இல் TIME பத்திரிகையின் அட்டைப்படத்தில் சிறந்த போராளியாக இடம்பெற்றார். TIME பத்திரிகை கிரேட்டாவை அடுத்த தலைமுறை தலைவர் என்று கூறி பெருமைப்படுத்தியது. கிரேட்டா தன்பர்க் மற்றும் அவரது இயக்கம் குறித்து, Make the world Greta again என்ற 30 நிமிட ஆவணப்படம் எடுக்கப்பட்டது. சில ஊடகங்கள் உலக அரங்கில் கிரேட்டா ஏற்படுத்திய தாக்கத்தை ''கிரேட்டா தன்பெர்க் விளைவு'' என்று வர்ணித்துள்ளன. ஐ.நா மாநாட்டில் ஆவேச உரை ஐ.நாவின் இளைஞர் பருவநிலை மாநாட்டில் கலந்துகொண்டு கிரேட்டா உரையாற்றினார். ஐ.நா-வின் பருவநிலை மாநாட்டிலும் கலந்துகொண்டார். 12 மாதங்களுக்கு முன்பு இவர் தொடங்கிய தனிப்போராட்டம் தற்போது உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர் உலகத் தலைவர்களிடம் சரமாரியாகக் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
இளைய சமுதாயம் உங்களை (உலகத் தலைவர்கள்) உற்று நோக்கிக்கொண்டிருக்கிறது. வளிமண்டலத்தை அச்சுறுத்தும் வாயுக்கள் வெளியேற்றத்தை எதிர்கொள்வதில், இளைய தலைமுறையினரை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள். சுற்றுச்சூழல் சீர்கெட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறீர்கள். உங்களுக்கு என்ன துணிச்சல்?
என்று ஐ.நா. பருவநிலை மாநாட்டில் ஆவேசமாக எழுப்பியுள்ள கேள்வி இன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.   https://twitter.com/i/status/1176175245323067392