ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டமடைய அரச தலையீடே காரணம்: ஒப்புக்கொண்டார் பிரதமர்

ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டமடைய அரச தலையீடே காரணம்: ஒப்புக்கொண்டார் பிரதமர்

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 8:33 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான சேவை நட்டமடையும் நிறுவனமாக மாறுவதற்கு அரசாங்கத்தின் தலையீடுகள் காரணமானதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று (23) கொழும்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் ஒப்புக்கொண்டார்.

CNN வணிகச் செய்தியாளர் ரிச்சர்ட் க்வெஸ்ட் வழி நடத்திய இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் விமான சேவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் தலையீடு குறித்து கருத்து வெளியிட்டார்.

இதன்போது, இவ்விடயத்தில் அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பில் பிரச்சினை உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கும் மேற்பட்ட கடன் உள்ளது. அதனை செலுத்த வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பின்னடைவிற்கு அரசாங்கத்தின் தலையீடுகள் காரணமாக அமைந்ததாக பிரதமர் வெளியிட்ட கருத்தினை இன்று பத்திரிகைகளும் பிரசுரித்திருந்தன.

விமான சேவை நடவடிக்கைகளில் உண்மையிலேயே தலையீடு செய்தது யார்?

2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தை அடுத்து அமைச்சரவைக்கும் மேலாக பொருளாதார முகாமைத்துவ உப குழுவொன்றை நியமித்து அதன் தலைமை பொறுப்பை ரணில் விக்ரமசிங்க கைப்பற்றிய விதம் நினைவில் உள்ளதா?

ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் கொள்கைத் தீர்மானங்களை எடுப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ உப குழுவே அமைச்சரவையை தூண்டியது.

தமது ஆலோசகராக செயற்பட்ட நண்பரின் சகோதரன் சுரேன் ரத்வத்தே என்பவரை விமான நிறுவனத்தின் தலைவராக நியமித்ததால் அவர் தமது எண்ணத்திற்கேற்ப நிறுவனத்தை நிர்வகித்து இறுதியில் நாட்டிற்கே சுமையாக உள்ள நிறுவனமாக அதனை சீர்குலைத்துள்ளார்.

ஐரோப்பா​விற்கான விமானப் பயணங்களை இரத்து செய்தமை, குறுகிய விமானங்களை கொள்வனவு செய்யும் நடவடிக்கையினை இரத்து செய்து பாரிய தொகையை விமான விற்பனை நிறுவனத்திற்கு நட்டஈடாக செலுத்தியமை, அதிக சம்பளத்திற்கு அநாவசியமானவர்களை ஆட்சேர்ப்பு செய்தமை போன்ற விடயங்கள் பிரதமரின் நண்பரது சகோதரன் விமான சேவையை வழிநடத்திய காலப்பகுதியிலேயே அரங்கேறின.

நிறுவனத்தின் நட்டத்தையோ செயற்திறமையையோ சற்றும் பொருட்டாகக் கொள்ளாத சுரேன் ரத்வத்தே இறுதியில் ஒப்பந்த காலம் நிறைவுபெறுவதற்கு முன்னதாக பல மாதங்களுக்கான சம்பளத்தை ஒரே தடவையில் பெற்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தார்.

இதற்கமைய, ஸ்ரீ லங்கன் விமான சேவை நட்டமடைவதற்கு உண்மையிலேயே தலையீடு செய்தது யார் என்பது தெளிவாகின்றதல்லவா?

 • ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தில் மாத்திரமல்லாது நாட்டிலுள்ள அனைத்து துறைகளிலும் ரணில் விக்ரமசிங்க தலையீடு செய்த விதம் நாட்டு மக்களுக்கு நன்கு நினைவிலுள்ளது.
 • 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றியை அடுத்து பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாவிட்டாலும் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டமை
 • பிரதமராக பதவியேற்ற உடனேயே நிதி அமைச்சின் கீழ் இயங்கி வந்த மத்திய வங்கியை தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வந்தமை
 • அமைச்சரவையின் எதிர்ப்புகளை கவனத்திற்கொள்ளாது தனது நண்பர் அர்ஜுன் மகேந்திரனை மத்திய வங்கியின் ஆளுநராக நியமித்தமை
 • முறிகள் விநியோக நடைமுறையை தமக்கேற்றவாறு மாற்றி இரண்டு தடவைகள் முறிகள் விநியோக மோசடி இடம்பெறுவதற்கு வழிவகுத்தமை
 • பாரிய முதலீடுகள் எனக் கூறி ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், சீமந்து தொழிற்சாலை, குளியாப்பிட்டி வொக்ஸ்வேகன் தொழிற்சாலை, ஹொரணை டயர் தொழிற்சாலை போன்ற போலி திட்டங்களை அறிவித்தமை
 • நாட்டிற்கு சாதகமாக அமையும் என்ற போர்வையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவிற்கு தாரை வார்த்தமை
 • முதலீட்டு சபைக்கு மேலாக அரச – தனியார் கலப்பு முகவர் நிறுவனத்தை உருவாக்கி அழுத்தம் பிரயோகிக்க முற்பட்டமை
 • நண்பர்கள் இலாபமடையும் வகையில், விவசாய அமைச்சிற்காக இராஜகிரியவிலுள்ள கட்டடமொன்றை வாடகைக்கு பெற்றமை
 • இவை அனைத்தையும் விட நாட்டின் நிர்வாகத்தை சீர்குலைத்தமை
 • தமக்கு நெருக்கமான சிலரை நியமித்து 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்டதன் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்களை சூட்சுமமான முறையில் கபளீகரம் செய்தமை
 • இதன் விளைவாக நாட்டில் நிர்வாக சிக்கலை ஏற்படுத்தியமை
 • மக்களின் வாக்குகளால் வெற்றியீட்ட முடியாதென்பதால், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டும் என சிவில் அமைப்புக்கள் கோருவதாகத் தெரிவித்து மீண்டும் அரசியலமைப்பு நெருக்கடியை உருவாக்குவதற்கு முயற்சித்தமை
  அரசாங்கத்தின் தலையீடு ஸ்ரீலங்கன் விமான சேவை சீர்குலைவதற்கு காரணமானதாக தற்போது கூறுகின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தாம் செய்த இந்த தலையீடுகளால் நாட்டிற்கு ஏற்பட்ட பாதகத்தையும் பொறுப்பேற்பாரா?

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்