ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமனக் கடிதங்கள் கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Sep, 2019 | 5:56 pm

Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ஐவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் அனைவருக்கும் இதன்போது நியமனக் கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவராக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி நிஹால் சுனில் ராஜபக்ஸ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து, ஓய்வுபெற்ற அமைச்சின் செயலாளர் W.M.H.M.அதிகாரி ஆகியோர் ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாவர்.

ஏப்ரல் 21 தாக்குதலுடன் நேரடியாக அல்லது மறைமுகமாக தொடர்புபட்டுள்ளதாகக் கருதப்படும் அரச உத்தியோகஸ்தர்கள் , உயர் பதவி வகிப்பவர்கள் மற்றும் தாக்குதல் தொடர்பில் அறிந்திருந்தும் அதனை பொருட்படுத்தாமல் விட்டவர்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அதிகார துஷ்பிரயோகம், பொருட்படுத்தாமை, பின்வாங்குதல், பொறுப்புணர்ந்து செயற்படாமை உள்ளிட்ட காரணங்களால் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவங்கள் மீண்டும் நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என பரிந்துரைப்பதே ஜனாதிபதி ஆணைக்குழுவின் முக்கிய கடப்பாடாகும்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரைவானதும் பக்கசார்பற்றதுமான விசாரணைகளை நடத்துதலும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் செயற்பட்டவர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பில் ஆராய்வதும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயற்பாடாகும்.

பயங்கரவாத தாக்குதலின் பின்னர் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், அமைதியை சீர்குலைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள், சொத்துக்களை சேதமாக்கியவர்கள் தொடர்பிலும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் ஆராயப்படவுள்ளது.

இனம் மற்றும் மதங்களுக்கு இடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் நபர்கள் மற்றும் அமைப்புகள் தொடர்பிலும் , ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசேட ஆணைக்குழுவினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் முதலாவது இடைக்கால அறிக்கை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதன் பின்னர் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

ஆறு மாதங்களுக்குள் விசாரணைகள் நிறைவு செய்யப்பட்டு, பரிந்துரைகள் அடங்கிய இறுதி அறிக்கையை அனைத்து உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கையளிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிவிசேட வர்த்தமானியை வௌியிட்டு அறிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்