மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிப்பு

by Staff Writer 22-09-2019 | 2:00 PM
Colombo (News 1st) நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை, இன்று (22) முதல் மேலும் அதிகரிக்கும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய தென் மற்றும் வட மேல் மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களின் சில இடங்களில் 150 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, நேற்று (21) காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேர காலப்பகுதிக்குள் காலி - தெல்லவ பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. குறித்த பகுதியில் 112.5 மில்லிமீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதுதவிர, காலி - ஹியாரே பகுதியில் 102.5 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சியும் களுத்துறை - மதுகம பகுதியில் 100.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மாத்தறை மாவட்டத்தின் களுபோவிட்டியான பகுதியில் 102.7 மில்லி மீற்றர் வரை மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை, காலி முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பிராந்தியம் மற்றும் புத்தளம் முதல் மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 முதல் 55 வரை அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. தென் கடற்பிராந்தியங்களில் காற்று மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் குறித்த கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாக அமையும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.