by Staff Writer 22-09-2019 | 8:39 AM
Colombo (News 1st) தமது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு தக்க பதிலடி வழங்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் ஈரானுக்கு சொந்தமானவை எனவும் விசாரணைகளில் அனைத்தையும் வௌிக்கொணர தயாராகவுள்ளதாகவும் சவுதி அரேபிய வௌிவிவகார அமைச்சர் அடேல் அல் ஜூபைர் (Adel al Jubeir) தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், தம் மீதான குற்றச்சாட்டுக்களை ஈரான் தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.
இதனிடையே, சவுதி அரேபியாவின் பாதுகாப்பிற்காக தமது படைகளை அனுப்பவுள்ளதாக அமெரிக்கா அறிவித்ததையடுத்து, தம்மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டால், எந்தவொரு நாடாயினும் அந் நாட்டின் மீது போர் தொடுக்க தயாரென ஈரான் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவுதி அரேபியாவிலுள்ள பாரிய இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது கடந்த 14 ஆம் திகதி வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதுடன் இதனையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இந்தத் தாக்குதலுக்கு யேமனின் ஹவூதி கிளர்ச்சிக்குழு உரிமை கோரியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.