by Staff Writer 22-09-2019 | 7:14 AM
Colombo (News 1st) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கும் நோக்கில், மற்றுமொரு கலந்துரையாடலை இந்த வாரம் நடத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி செயலாளருடன் கடந்த வௌ்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல், இணக்கப்பாடின்றி நிறைவடைந்ததாக அமைச்சின் செயலாளர் M.M.P.K. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
சம்பளப் பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகளிடம் இடைக்கால பரிந்துரையொன்றை முன்வைத்தபோதிலும் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை என செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, சம்பளப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சருடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் 13ஆவது நாளாகவும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
தமது பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படாத நிலையில் இந்த வாரம் முதல், பணிப்பகிஷ்கரிப்பை மேலும் தீவிரப்படுத்தவுள்ளதாக பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் தொழிற்சங்க ஒன்றியத்தின் இணைச் செயலாளர் தம்மிக்க எஸ். பிரியந்த தெரிவித்துள்ளார்.