ரணில் விக்ரமசிங்கவின் புதிய உபாய மார்க்கம்

by Staff Writer 20-09-2019 | 8:50 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் ரணில் விக்ரமசிங்கவிற்கு நெருக்கமான சிலரை நியமிப்பதற்கு முயற்சிக்கப்படுவதாக இன்று தகவல் வெளியானது. இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு ரணில் விக்ரமசிங்க தயாராவதாக 'த ஐலண்ட்' பத்திரிகை இன்று செய்தி வெளியிட்டது. அடுத்த வாரம் கூடவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவில் நியமிக்கப்படவுள்ள வேட்புமனு குழுவில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு தமது பெயரையும் ரணில் விக்ரமசிங்க முன்வைப்பதற்கு தயாராவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கட்சியின் நம்பத்தகுந்த தகவல்களை மேற்கோள் காட்டி ஷெக்கி ஜபார் இந்த செய்தியை எழுதியுள்ளார். 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு நியமிக்கப்பட்ட பின்னர், கடந்த 25 வருட காலப்பகுதியில் 30 தேர்தல்களில் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியை தோல்வியடையச் செய்துள்ளார். 1994 ஆம் ஆண்டு காமினி திசாநாயக்கவின் இழப்புடன் ஏற்பட்ட வெற்றிடத்திற்காக, ஜனாதிபதி வேட்பாளராக முன்நிற்பதை தவிர்த்து, 1999ஆம் ஆண்டு முதல் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டார். சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் தோல்வியடைந்த அவர், மஹிந்த ராஜபக்ஸவிடம் 2005ஆம் ஆண்டு தோல்வியடைந்தார். 1994ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றியடையச் செய்ய அவரால் முடியவில்லை. எனினும், 2001 ஆம் ஆண்டு பரிசாகக் கிடைத்த பொதுத்தேர்தலில் வெற்றியை, இரண்டு வருட காலத்திற்கேனும் காப்பாற்றுவதற்கு ரணில் விக்ரமசிங்கவினால் இயலாது போனது. பொது வேட்பாளர் என்ற போர்வையில் 2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல்களின் அவர் போட்டியிடவில்லை. 2010ஆம் ஆண்டு பொது வேட்பாளராக முன்நிறுத்தப்பட்ட சரத் பொன்சேகா தேர்தலில் தோல்வியடைந்தவுடனே, அந்த தோல்வியை ஏற்று, சுதந்திரம் மற்றும் நியாயமான தேர்தலொன்று நடைபெற்றதாக ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு அறிவித்தார். 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளருக்குள் மறைந்து, பாராளுமன்றத்தில் சிறுபான்மை உறுப்பினர்களே அவருடன் இருந்த நிலையில் பிரதமர் பதவியை பெற்றுக்கொண்டார். 2001 ஆம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய இந்த தலைவர், கூட்டணி அமைத்துள்ள சில கட்சிகளின் ஒத்துழைப்புடன் இந்த தருணத்திலும் தனது பிரதமர் பதவியை பாதுகாத்து வருகின்றார். மக்களின் விருப்பிற்கு அமைய அதிகாரத்தை கைப்பற்ற முடியாத ரணில் விக்ரமசிங்க, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை உண்மையாகவே கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த பிரேரணையை, தன்னுடன் நெருங்கிய சிலருடன் இணைந்து நிறைவேற்று அதிகாரங்களை கொள்ளையிடுவதற்காக பயன்படுத்த முயற்சித்தார். நியூஸ்ஃபெஸ்ட்டும் வேறு சில பிரிவினரும் உயர் நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்தமையால், இந்த முயற்சி ஓரளவேனும் தடுக்கப்பட்டது. எனினும், ஜனாதிபதியின் அதிகாரங்களுள் சில பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சென்றமையால், அதிகார பேராசை காரணமாக நாடு தற்போது குழப்பமடைந்துள்ளது. ஏனையவர்களை விடவும் ஜனநாயகத்திற்காக முன்நிற்பவராகக் காண்பிக்கும் ரணில் விக்ரமசிங்க, ஜனநாயகத்தை ஒடுக்கி பதவியை பாதுகாக்கும் செயற்பாட்டையே அனைத்து சந்தர்ப்பங்களிலும் மேற்கொண்டார். கடந்த 25 வருடங்களாக தலைமைத்துவத்திற்கு சவால் விடுக்காத மற்றும் தன்னுடன் நெருங்கிய சிலரின் குழுக்களை செயற்படுத்தும் அவர், கட்சி மற்றும் ஆதரவாளர்கள் தோல்வியடைவது தொடர்பில் குறைந்தளவே அவதானம் செலுத்தியுள்ளார். தமக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பலரை செயற்குழுவில் இருந்து நீக்கி, நெருக்கமான பலரை ரணில் விக்ரமசிங்க தற்போது இணைத்துள்ளார். தற்போது ரணில் விக்ரமசிங்கவின் புதிய உபாய மார்க்கமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. கட்சியின் யாப்பு என்ற போர்வையில், செயற்குழுவுக்குள் வேட்புமனு குழுவொன்றை நியமித்து ஜனாதிபதி வேட்பாளரை பிரேரிப்பதற்கு முயற்சித்து வருகின்றார். சஜித் பிரேமதாச கட்சியையும் ஆதரவாளர்களையும் வெற்றிபெறச் செய்யும் வேட்பாளர் என, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதற்கு ஆதரவு தெரிவிக்கும் ஏனைய கட்சிகளின் பெரும்பான்மையோர் தீர்மானித்துள்ள நிலையில், ரணில் விக்ரமசிங்க இந்த நடவடிக்கையை முன்னெடுக்கத் தயாராகி வருகின்றார். தனக்கு பக்கசார்பானவர்களை செயற்குழுவில் நியமித்து, செயற்குழுவில் போலியான வேட்புமனுக்குழுவொன்றை அமைக்க ரணில் விக்ரமசிங்க தயாராவது கட்சியை வெற்றியடையச் செய்வதற்காகவா? 40 வருட அரசியல் வாழ்க்கையில், மக்களின் நிதியின் ஊடாகவே ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்துள்ளார். ஆதரவாளர்களின் வெற்றி தொடர்பில் எவ்வித பொறுப்புமற்ற ரணில் விக்ரமசிங்க, இம்முறையும் தோல்வியடைந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப்பெற்று மக்களின் பணத்தில் மேலும் வாழ்வதற்காக முயற்சிக்கின்றாரா?