ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது

by Staff Writer 20-09-2019 | 3:36 PM
Colombo (News 1st) ஜனாதிபதி தேர்தலுக்காக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கான பயணத்தின் முதலாவது படியாக இன்று வெற்றிகரமாக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார். தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதேவேளை, அரச நிகழ்வுகளில் பொது சொத்துக்களை பயன்படுத்தி ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை பிரபல்யப்படுத்தும் வகையில் செயற்படுதல் குறித்து முறைப்பாடு செய்யுமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான சட்டம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கான கட்டளைகளின் பிரகாரம் அவ்வாறான செயற்பாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது நிதியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் அடிக்கல் நாட்டுதல், கட்டட திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்வுகளில் அரசியல்வாதிகளை பிரபல்யப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக முறைப்பாடுகள் பல கிடைத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.