மாணவன் பாலியல் வன்கொடுமை: ரக்பி வீரர்களுக்கு சிறை

மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 2 ரக்பி வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை

by Staff Writer 19-09-2019 | 5:53 PM
Colombo (News 1st) ஆறரை வயது மாணவனை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியமை, அதற்கு உதவி புரிந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் இரண்டு ரக்பி வீரர்களுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பிரதம மேல் நீதிமன்ற நீதிபதி விக்கும் களுஆராச்சி குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனையை விதித்து இன்று தீர்ப்பளித்துள்ளார். குற்றவாளிகள் இருவருக்கும் 10 மற்றும் 9 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 2 இலட்சம் ரூபா நட்டஈட்டை வழங்குமாறும் குற்றவாளிகளுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், இரண்டு குற்றவாளிகளுக்கும் தலா 20,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் உயர் தரத்தில் கல்வி பயின்ற குறித்த இருவரும் பாடசாலை ரக்பி குழாத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர். இதன்போது, பட்மிண்டன் பயிற்சிக்காக சென்றிருந்த மாணவனை குற்றவாளிகளான இருவரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளமை நீதிமன்றத்தில் நிரூபணமாகியுள்ளது.