ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்பு

by Staff Writer 19-09-2019 | 6:49 PM
Colombo (News 1st) இன்று மாலை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் பிரேரணையைக் கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதியைப் பெறும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எனினும், அமைச்சரவையிலுள்ள பலர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்னர், சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழு கூடியது. பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பாராளுமன்றக் குழுவினர் சுமார் 50 பேரளவில் பங்கேற்றிருந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். இதன்போது, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கான பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க பாராளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்துள்ள மனோ கணேசன் மற்றும் ரிஷாட் பதியுதீன் ஆகிய அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளாத போதிலும், எதிர்ப்பு தெரிவிப்பதற்கு அவர்களும் இணங்கியுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் குறிப்பிட்டார். அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பு பிரதமருடன் கலந்துரையாடுவதற்காக அமைச்சர்கள் அலரி மாளிகைக்கு சென்றிருந்தனர். கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்ட 20 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை விரைவாக பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என அமைச்சரவையில் பிரேரிக்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்து செய்து, பிரதமருக்கு கூடுதல் அதிகாரங்கள் கிடைக்கும் இந்த சட்டமூலத்தை மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்காக பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. எவ்வாறாயினும், அமைச்சரவையின் பெரும்பான்மையோர் இந்த பிரேரணையை இன்று நிராகரித்தனர்.

ஏனைய செய்திகள்