ஆப்கானில் தலிபான்கள் தாக்குதல்: 10 பேர் பலி

ஆப்கானில் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

by Staff Writer 19-09-2019 | 3:11 PM
Colombo (News 1st) ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியில் வைத்தியசாலை ஒன்றின் வௌிப்புறத்தில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரக் வண்டி வெடித்ததில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தலிபான்களால் Qalat நகரில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பலியானோர் பெரும்பாலும் வைத்தியர்களும் தாதியர்களும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்தநிலையில், குறித்த வைத்தியசாலைக்கு அருகாமையிலுள்ள அரச புலனாய்வு அலுவலகத்தை இலக்கு வைத்தே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக தலிபான் அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ஆப்கன் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி உரையாற்றவிருந்த தேர்தல் கூட்டமொன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று, இம்மாத ஆரம்பத்தில் காபூல் நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் உட்பட 11 பேர் பலியாகினர். ஆப்கானிஸ்தானில் இடம்பெற்று வரும் 18 வருட கால யுத்தத்தை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளைத் தடுக்கும் பொருட்டு, தலிபான்கள் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.