Batticaloa Campus: COPE இல் ஆஜராகாத ஹிஸ்புல்லா

Batticaloa Campus: ஹிஸ்புல்லா, அவரது மகன் கோப் குழுவில் ஆஜராகவில்லை

by Staff Writer 18-09-2019 | 9:25 AM
Colombo (News 1st) மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்படும் Batticaloa Campus நிறுவனம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா மற்றும் அவரது மகன் ஹிராஸ் ஹிஸ்புல்லா ஆகியோர் நேற்றைய தினம் கோப் குழுவில் ஆஜராகவில்லை என அதன் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்துள்ளார். வௌிநாட்டுத் தூதரக குழுவினருடனான கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, வௌிநாடு செல்வதால் அவர்கள் கோப் குழுவில் ஆஜராகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார. இதன்படி, தாம் கலந்துகொள்ளும் தூதரக குழுவின் கூட்டம் தொடர்பில் எழுத்துமூலமான ஆவணத்துடன், எதிர்வரும் 9 ஆம் திகதி கோப் குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் சுனில் ஹந்துன்னெத்தி கூறியுள்ளார். இதேவேளை, Batticaloa Campus திட்டத்திற்கான உடன்படிக்கை சட்டவிரோதமானது என கோப் குழுவில் நேற்று தெரியவந்தது. Batticaloa Campus தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் பல விடயங்கள் வெளியாகின. இதனைத்தவிர, இந்தத் திட்டத்திற்கு வேலைத்திட்டம் வெளிநாட்டு நிதியில் முன்னெடுக்கப்பட்ட விதம் தொடர்பில் ஆராய்வதற்காக, இலங்கை வங்கியின் தலைவர் உள்ளிட்ட நிர்வாகக்குழு அழைக்கப்பட்டிருந்தது.