கச்சா எண்ணெய் விலை உயர்வு

28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு

by Bella Dalima 18-09-2019 | 5:03 PM
சவுதி அரேபிய எண்ணெய் நிறுவனமான அரம்கோ மீது நிகழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலால் கச்சா எண்ணெய் விலை ஒரேநாளில் 20 வீதம் அதிகரித்துள்ளது. சவுதி அரேபிய அரசின் தேசிய எண்ணெய் நிறுவனமான அரம்கோவில் இருந்து தான் பெரும்பாலும் ஆசிய நாடுகளுக்குத் தேவையான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில், அரம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து கடந்த 14 ஆம் திகதி ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏவுகணை மற்றும் குண்டுத் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். இதனால், குராய்ஸ் மற்றும் அப்கய்க் ஆகிய இடங்களில் உள்ள அரம்கோவின் எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக்கிடங்கில் தீ பரவியது. ஏமனில் அரசுக்கு எதிராக போராடும் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபிய இராணுவம் சண்டையிட்டு வருகிறது. இதன் காரணமாகவே அரம்கோவை இலக்கு வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வரும் ஈரான் தான் தாக்குதலுக்குக் காரணம் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியது. இது ஒரு புறமிருக்க, எண்ணெய் வயல் மற்றும் சேமிப்புக் கிடங்கில் பற்றி எரியும் தீயைக் கட்டுப்படுத்த சவுதி அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தீயைக் கட்டுப்படுத்தி மீண்டும் எண்ணெய் உற்பத்தியை சீரான நிலைமைக்கு கொண்டு வர சில வாரங்கள் ஆகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, நாளொன்று 5.7 மில்லியன் பெரல்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சவுதி அரேபியா ஏற்றுமதி செய்யும் கச்சா எண்ணெயில் இது பாதி அளவாகும். உலக அளவிலான உற்பத்தியில் இது 5 வீதமாகும். உற்பத்தி முடங்கியுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த திங்கட்கிழமை கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் 28 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 20 வீதம் விலை உயர்ந்தது. இந்த விலை உயர்வு, ஏனைய நாடுகளிலும் எதிரொலிக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலை உயரக் கூடிய அபாயம் உருவாகியுள்ளது.