தொடர்ந்து வாக்குறுதிகளை மட்டுமே வழங்கி வரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு

by Staff Writer 18-09-2019 | 9:09 PM
Colombo (News 1st)  நம்பிக்கையில்லா பிரேரணை உள்ளிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பாதுகாக்கும் பொருட்டு செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று மற்றுமொரு வாக்குறுதியை வழங்கியது. வட மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இசுறுபாயவிலுள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட மாகாணத்தின் 5 மாவட்டங்களை சேர்ந்த தொண்டர் ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டதுடன், அவ்விடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்.
சென்ற கிழமை தொண்டர் ஆசிரியர்கள் என்னை வந்து சந்தித்தார்கள். தங்களுடைய பிரச்சினைகளை சொல்லியிருக்கின்றார்கள். நான் பாராளுமன்றத்திற்கு வந்த பிறகு கல்வி அமைச்சரோடும், பிரதமரோடும் பேசுவதாகத் தெரிவித்தேன். அதன்படி இன்று காலை எனக்கு செய்தி கிடைத்தது. இவர்கள் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள் என்று. அவர்களை நான் சென்று பார்த்தேன். அவர்கள் இந்த பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விடயம் மாகாண சபையினால் சிபாரிசு செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த நடைமுறைக்கு அவகாசம் தேவைப்படும்.
இதேவேளை, வட மாகாண சுகாதாரத் தொண்டர்களுக்கான நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்து, சுகாதாரத் தொண்டர்கள் கடந்த 5 ஆம் திகதி சாவகச்சேரியில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர். இதன்போது, குறித்த இடத்திற்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அங்கும் அவர்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினார். இதேவேளை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பல வருடங்களாக வாக்குறுதிகளை வழங்கி வருகிறது.