உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடருக்கு இலங்கை தயார்

உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர்; இலங்கை வீரர்கள் தயார்

by Staff Writer 18-09-2019 | 9:09 AM
Colombo (News 1st) உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் போட்டிகளுக்காக இலங்கை அணி வீரர்கள் சிறப்பான முறையில் தயாராகியுள்ளதாக அணித்தலைவரான இந்திக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சம்பியன்ஷிப் பளுதூக்கல் தொடர் தாய்லாந்தில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. சர்வதேச பளூதூக்கல் சம்மேளனத்தின் பூரண அனுசரணையில் இந்தத் தொடர் நடத்தப்படுகிறது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி தொடரில் 6 வீரர்களும் 2 வீராங்கனைகளும் பங்கேற்கின்றனர். ஆடவர் பிரிவில் இசுரு குமார 55 கிலோ எடைப்பிரிவிலும் நிலங்க பலகசிங்க 81 கிலோ எடைப்பிரிவிலும் சதுரங்க லக்மால் மற்றும் சிந்தன கீதால் விதானகே ஆகியோர் 73 கிலோ எடைப்பிரிவிலும் போட்டியிடவுள்ளனர். தொடரில் இலங்கை அணியை வழிநடத்தவுள்ள இந்திக்க திஸாநாயக்கவும் 73 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுவதுடன் சுதேஷ் பீரிஸூம் அதே எடைப்பிரிவில் போட்டியிடுகின்றார். ஹங்சனி கோமஸ் 49 கிலோ எடைப்பிரிவிலும் சமரி வர்ணகுலசூரிய 55 கிலோ எடைப்பிரிவிலும் மகளிர் பிரிவில் போட்டியிடுகின்றனர். இன்று நடைபெறவுள்ள போட்டிகளில் இசுரு குமார 55 கிலோ எடைப்பிரிவிலும் சதுரங்க லக்மால் 61 கிலோ எடைப்பிரிவிலும் களம் காண்கின்றனர். மகளிர் பிரிவில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் ஹங்சனி கோமஸ் 49 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடுகின்றார். இந்தத் தொடருக்கான சிறப்பான முறையில் தயாராகியுள்ளோம். தொடரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீர வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடரில் அதிகபட்ச திறமைகளை வெளிப்படுத்தி ஒலிம்பிக் தகுதிச் சுற்றுக்கு தெரிவாக எதிர்ப்பார்க்கின்றோம். அத்துடன் தரப்படுத்தலிலும் முன்னிலையடைய எதிர்பார்க்கின்றோம் என இலங்கை பளுதூக்கல் அணியின் தலைவர் இந்திக்க திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.