பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளான பொதுமக்கள்

பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அசௌகரியங்களுக்குள்ளான பொதுமக்கள்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 5:52 pm

Colombo (News 1st) சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு துறைகளை சேர்ந்த தொழிற்சங்கத்தினர் நாட்டின் சில பகுதிகளில் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கைகளினால் பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியத்தினர் இன்று மதியம் கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இரண்டு பேரணிகளாக வருகை தந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு நகர மண்டப சுற்றுவட்ட பகுதியில் ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

ஒரு பேரணி டொரிங்டன் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டதுடன், மற்றைய பேரணி கொழும்பு பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்தது.

இதனிடையே, பல வருடங்களாக சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மகாவலி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினர் இன்று காலை மௌன எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்தனர்.

இலங்கை மகாவலி அதிகாரசபை முன்றலில் இருந்து இவர்களின் பேரணி ஆரம்பமானது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதியிடம் மகஜரொன்றை கையளிப்பதற்காக பேரணியாக ஜனாதிபதி செயலகத்திற்கு சென்றனர்.

மேலதிக செயலாளர் மகஜரை பெற்றுக்கொண்டதுடன், அதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, யுத்தத்தினால் அங்கவீனமுற்ற 12 வருடங்களுக்கும் குறைந்த சேவைக்காலத்தைக் கொண்ட இராணுவவீரர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் இன்று ஆறாவது நாளாகவும் கொழும்பு கோட்டை ரயில் நிலைய முன்றலில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமது சேவைக்காலத்தை காரணம் காட்டி ஓய்வூதியமாக மிகக்குறைந்த தொகை வழங்கப்படுவதாகவும், அதில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தி இந்த ​போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்துள்ள அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள பின்புலத்திலேயே அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விசேட தேவையுடைய இராணுவ வீரர்களுக்கு எதிராக கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

குறித்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்கள் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, காலி வீதி, அலரி மாளிகை, லோட்டஸ் வீதி, பிரதமர் செயலகம் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க தடை விதித்து கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.

கொழும்பு மத்திய பொலிஸ் அத்தியட்சகர் நிஷாந்த சொய்சா, சட்டப்பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன மற்றும் கோட்டை பொலிஸ் முன்வைத்த கோரிக்கைகளுக்கு இணங்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – லோட்டஸ் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனால் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு வாகன சாரதிகளை பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேவேளை, ஶ்ரீலங்கா சுதந்திர சேவையாளர் சங்கத்தினர் இன்று மதியம் கோட்டை ரயில் நிலைய முன்றலில் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் 2,500 ரூபா மேலதிக கொடுப்பனவு இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதுடன் மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்து மூன்றாவது நாளாகவும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 75 டிப்போக்களின் பஸ் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் முற்போக்கு சேவையாளர்கள் சங்கத்தினர் மற்றும் இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கத்தினர் உள்ளிட்ட தொழிற்சங்க ஊழியர்கள் சுத்திகரிப்பு நிலைய முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்தனர்.

அரசாங்கத்தின் சிற்சில நடவடிக்கைகள் காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளுக்கு நாள் அழிவடைந்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதேவேளை, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இன்று காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர்.

சம்பள முரண்பாடு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரச வைத்திய அதிகாரிகளின் பகிஷ்கரிப்பு காரணமாக நாட்டின் பல வைத்தியசாலைகளின் சேவைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்