தாமரைக் கோபுர நிர்மாண மோசடி: ஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்

தாமரைக் கோபுர நிர்மாண மோசடி: ஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்

தாமரைக் கோபுர நிர்மாண மோசடி: ஜனாதிபதியின் கருத்திற்கு மஹிந்த ராஜபக்ஸ பதில்

எழுத்தாளர் Staff Writer

18 Sep, 2019 | 9:49 pm

Colombo (News 1st) தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளுக்காக ALIT நிறுவனத்திற்கன்றி China National Electronic Corporation நிறுவனத்திற்கே 2 பில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுரத்தின் நிர்மாண ஒப்பந்தத்திற்கு பரிந்துரைக்கப்பட்ட இரண்டு நிறுவனங்களும் 100 வீதம் சீன அரசாங்கத்திற்கு சொந்தமான பாரிய நிறுவனங்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ALIT எனும் நிறுவனம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு வழங்கிய இரண்டு பில்லியன் ரூபா முற்பணத்தைப் பெற்று காணாமற்போனதாக தாமரைக் கோபுரத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்திற்கு பதிலளிக்கும் வகையில் மஹிந்த ராஜபக்ஸ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

2012 ஆம் ஆண்டு தாமரைக் கோபுரத்திற்கு பொறுப்பாக ஜனாதிபதி என்ற வகையில் விடயங்களை தெளிவுபடுத்தியுள்ள மஹிந்த ராஜபக்ஸ, இந்த செயற்றிட்டத்தின் செயற்பாட்டு ஒப்பந்ததாரராக அனைத்து சந்தர்ப்பங்களிலும் ALIT நிறுவனமன்றி China National Electronic Corporation என்ற நிறுவனமே காணப்பட்டதாகக் கூறியுள்ளார்.

இந்த செயற்றிட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னதாக கடனை பெற்றுக்கொள்ளும் நாடு குறித்த திட்டத்திற்காக முதலீடு செய்யும் 15 வீதத்திற்குரிய நிதியாக இரண்டு பில்லியன் ரூபா 2012 ஆம் ஆண்டு ஒக்டோபர் 9 ஆம் திகதி தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவினால் பிரதான ஒப்பந்ததாரரான China National Electronic Corporation நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டமை ஆவணங்கள் மூலம் தெரியவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றும் தாமரைக் கோபுரத்தின் நிர்மாணப் பணிகளை China National Electronic Corporation நிறுவனமே முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்று வரை அனைத்து கட்டணங்களும் China National Electronic Corporation நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை ஆவணங்கள் மூலம் உறுதிப்படுத்த முடியும் என மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு பில்லியன் ரூபாவுடன் மாயமான சீன நிறுவனம் தொடர்பிலான தகவல் முதற்தடவையாக தமது செவியில் எட்டியதாகத் தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஸ தாமரைக் கோபுரம் தொடர்பில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான 670 பக்கங்கள் கொண்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையிலும் அவ்வாறு 2 பில்லியன் ரூபாவுடன் காணாமற்போன சீன நிறுவனம் தொடர்பில் குறிப்பிடப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

சீன அரசாங்கத்திற்கு சொந்தமான மிகப்பெரிய நிறுவனமொன்று இலங்கையிலிருந்து 2 பில்லியன் ரூபாவுடன் காணாமற்போனதாகக் கூறுவது சீன அரசாங்கத்தின் நற்பெயருக்கு ஏற்படுத்தப்படுகின்ற மிகப்பெரிய களங்கம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாமரைக் கோபுரம் திட்டத்துடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு மற்றும் கணக்காய்வாளர் வசமுள்ளதால், அதன் உண்மைத்தன்மையைக் கண்டறியும் விடயம் கடினமாகாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்