முடிவுகள் தன்னிச்சையாக அல்லாது ஜனநாயக ரீதியில் மேற்கொள்ளப்படும் - சஜித் பிரேமதாச

by Staff Writer 17-09-2019 | 8:36 AM
Colombo (News 1st) ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். எனினும், இதற்கான பதில் இதுவரை தனக்கு கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, கட்சியின் செயற்குழு மற்றும் பாராளுமன்றக் குழு ஆகியவற்றின் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாக நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தலைமையிலான தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (17) காலை நடைபெற்றது. கொழும்பிலுள்ள நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தனது கட்சி அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஜனநாயக ரீதியில் செயற்படும் என தாம் நம்புவதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். முக்கியமான தீர்மானங்களை மேற்கொள்ளும்போது, தனது குடும்ப உறவுகளுடன் மாத்திரமோ அல்லது தன்னிச்சையாகவோ முடிவுகளை மேற்கொள்ளாது ஜனநாயக ரீதியில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்குவதற்கு தனது கட்சியில் வேறு யாரேனும் ஒருவருக்கு விருப்பம் இருப்பின் அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தான் கையளித்த கடிதத்தில் கோரியிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அந்த விருப்பங்கள் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்றக் குழு மற்றும் கட்சியின் தெரிவுக்குழு ஆகியன கூடி தீர்மானங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கான அதிகாரம் தற்போது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வசம்  காணப்படுவதாகத் தெரிவித்த அமைச்சர், தற்போது ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அறிவிப்பது மிக முக்கியமான விடயமொன்று என தாம் கருதுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரமசிங்க , கபீர் ஹஷீம், ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.