by Staff Writer 17-09-2019 | 4:21 PM
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பதவிப்பிரமாணம்
புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் இன்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சாந்த பண்டார, மனோஜ் சிறிசேன, டீ.பி.ஹேரத் ஆகியோரே புதிய பாராளுமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பாராளுமன்றத்தில் பதவிப்பிரமாணம் இடம்பெற்றது.
தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சாந்த பண்டார அண்மையில் இராஜினாமா செய்தார்.
இதனால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மீண்டும் அவரையே நியமிக்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானித்தது.
அதற்கமைய, சாந்த பண்டார இன்று மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, சாலிந்த திசாநாயக்க காலமானதால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடத்திற்கு டீ.பி.ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரும் இன்று சபாநாயகர் முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் சந்திரசிறி கஜதீர காலமானதால் ஏற்பட்ட பதவி வெற்றிடத்திற்கு மனோஜ் சிறிசேன நியமிக்கப்பட்டு, அவரும் இன்று பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.