தொடரும் மழையுடனான வானிலை; மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 17-09-2019 | 1:40 PM
Colombo (News 1st) நிலவும் அதிக மழையுடனான வானிலையால் மில்லகந்த பகுதியில் வௌ்ளம் ஏற்படும் அளவிற்கு களு கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக இடர்முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, களனி, அத்தனகளு ஓயா, கிங் கங்கை ஆகியவற்றின் நீர்மட்டம் சாதாரண நிலையில் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் தற்போது நிலவும் பலத்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவொன்று இன்று (17) காலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இதனிடையே, 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இன்று முற்பகல் 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் அதிகூடிய 90.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி கண்டி மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இதேவேளை, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணியின் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, கடற்பிராந்தியங்களில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்பதால் கடற்சார் ஊழியர்கள் மற்றும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் வானிலை அதிகாரி கணபதிப்பிள்ளை சூரியகுமாரன் அறிவுறுத்தியுள்ளார்.