Colombo (News 1st) ஜனாதிபதி வேட்பாளராக தேர்தலில் போட்டியிடுவதற்கு மேலும் எவரேனும் விரும்பினால் பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழுவின் பெரும்பான்மை விருப்பத்தை கேட்டறிவதற்கு தாம் தயார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர், அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று தெரிவித்தார்.
அமைச்சர் மங்கள சமரவீரவின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர்களான சந்திராணி பண்டார, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாசிம், ரஞ்ஜித் மத்தும பண்டார ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்ததாவது,
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் நான் வேண்டுகோள் ஒன்றை விடுத்தேன். ஏதேனும் நெருக்கடி இருக்குமாயின், வேட்பாளராகும் எண்ணம் வேறு எவருக்கேனும் இருக்குமாயின், வேட்பாளர் தொடர்பில் ஜனநாயக வழிமுறையை பின்பற்றி, பாராளுமன்ற குழு மற்றும் செயற்குழுவை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தி அதனை தீர்மானிக்குமாறு நான் எழுத்துமூல கோரிக்கையை கையளித்தேன். ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் கட்சி. ஒரு சில தரப்பினரை போன்று ஒரு குடும்பத்தை மையமாகக் கொண்டு, உறவினர்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு பிரிவினரை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு எமது கட்சி தீர்மானங்களை மேற்கொள்வதில்லை. ஐக்கிய தேசியக் கட்சி அதன் பேருக்கு ஏற்றதைப்போன்று அனைத்து இனத்தவரையும் ஒற்றுமைப்படுத்தும் ஐக்கியமான கட்சியாகும். அந்த கட்சிக்குள் தீர்மானங்களை எடுக்கும் போது நாம் ஜனநாயக வழிமுறையை பின்பற்றுகின்றோம். ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிப்பதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்ற இத்தருணத்தில் பாராளுமன்ற குழுவையும் செயற்குழுவையும் அழைத்து, பேச்சுவார்த்தை நடத்தி, ஜனநாயக வழிமுறையின் கீழ் தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்ற எண்ணமே எனது மனதில் உள்ளது.