by Staff Writer 17-09-2019 | 11:29 AM
Colombo (News 1st) தமது தொழிற்சங்கத் தலைவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படுவதைக் கண்டித்து ஸிம்பாப்வே தலைநகர் ஹராரேயில் நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊதியம் உரிய முறையில் வழங்கப்படாமை, பொருத்தமற்ற வேலைக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த சில வாரங்களாக தொழிற்சங்கத் தலைவரான பீற்றர் மகொம்பெய் (Peter Magombeyi) தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டங்களை ஒழுங்கமைத்திருந்தார்.
இந்தநிலையில், தாம் மூவரால் கடத்தப்பட்டுள்ளதாக கடந்த சனிக்கிழமை அவரால் வட்ஸ்அப் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்பின்னர் அவர் காணாமல்போயுள்ளார்.
பீற்றர் மகொம்பெய் கண்டுபிடிக்கப்படும் வரை தாம் பணிகளுக்குத் திரும்பப் போவதில்லையென போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வைத்தியர்களுக்கான வௌ்ளை மேற்சட்டை அணிந்து, பதாகைகளை ஏந்தி சுலோகங்களை எழுப்பி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை போராட்டக்காரர்கள், ஸிம்பாப்வே ஜனாதிபதியின் அலுவலகத்திற்கு அணிவகுத்து செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால் அவ்வாறு செய்வதைத் தவிர்த்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.