by Staff Writer 17-09-2019 | 7:24 AM
Colombo (News 1st) அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா இன்று (17) இரண்டாவது தடவையாகவும் ஆஜராகவுள்ளார்.
மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் சாட்சியமளிப்பதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
மஹபொல நிதியத்தில் மோசடி இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதன் உறுப்பினராக செயற்பட்டதாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காமினி ஜயவிக்ரம பெரேரா சாட்சியம் வழங்குவதற்கு தேவைப்படும் ஆவணங்களை வழங்குமாறு உயர்கல்வி அமைச்சின் செயலாளருக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், குறித்த ஆவணங்கள் இன்றைய தினம் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி குறித்து முன்னாள பிரதம நீதியரசர் கே ஶ்ரீபவன், கடந்த வௌ்ளிக்கிழமை ஆணைக்குழுவில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது, மஹபொல நிதியத்துக்கு சொந்தமான மாலபே தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை குத்தகைக்கு விடுவது தொடர்பான ஒப்பந்தங்கள் போலியானவை எனவும் அவற்றுக்கு தான் எதிர்ப்பை வௌியிட்டதாகவும் அவர் சாட்சியம் அளித்திருந்தார்.
மஹபொல நிதியத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடி தொடர்பான முறைப்பாட்டை முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஸ முன்வைத்துள்ளார்.
இது தொடர்பான மற்றுமொரு முறைப்பாட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கேஷரலால் குணசேகர முன்வைத்துள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.