by Staff Writer 17-09-2019 | 10:54 AM
Colombo (News 1st) இந்திய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ஆட்ட நிர்ணய சதி இடம்பெறும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
கடந்த பெப்ரவரி நடைபெற்ற போட்டியொன்றிலேயே இந்தத் தகவல் பதிவாகியுள்ளது.
Rakesh Bafna மற்றும் Jitendra Kothari ஆகிய இரு தரகர்களே இந்திய மகளிர் அணியின் வீராங்கனைகளுடன் ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட முயற்சித்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பெங்களூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.
குறித்த இரு தரகர்களும் தமக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்புக்களை இந்திய மகளிர் அணி வீராங்கனைகள் அந்நாட்டு கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் ஊழல் சபைக்கு வழங்கியுள்ளனர்.
இதன் பின்புலத்திலேயே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், தரகர்கள் குறித்த தகவல்களை வழங்கிய வீராங்கனைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு விடயத்தையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை வெளியிடவில்லை.