''வேட்பாளரின் விஞ்ஞாபனத்திற்கு அமைய ஆராய தயார்'' - இரா. சம்பந்தன்

by Staff Writer 16-09-2019 | 2:53 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசிய கட்சி முன்மொழியும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சாதகமாக பரிசீலிக்கத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. சிரேஷ்ட அமைச்சர்கள் சிலருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றுடள்ளது. கொழும்பிலுள்ள இரா. சம்பந்தனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமைச்சர்களான மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, ராஜித சேனாரத்ன ஆகியோர் ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி தன்னுடன் கலந்துரையாடியதாக இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் M.A. சுமந்திரனும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார். அமைச்சர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைக் கோருவதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதிநிதிகள் தன்னிடம் கேட்டுக்கொண்டதாக இரா. சம்பந்தன் இதன்போது தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை உத்தியோகபூர்வமாக அறிவித்ததன் பின்னர் அதுகுறித்து கலந்துரையாட முடியும் என தாம் கூறியதாக இரா. சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் விஞ்ஞாபனத்திற்கு அமைய, அவருக்கு ஆதரவளிப்பதா, இல்லையா என்பது குறித்து ஆராய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக உள்ளதாக இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.