ஹெரோயின் வியாபாரம்; கைதானவர்களுக்கு விளக்கமறியல்

பேருவளையில் ஹெரோயினுடன் கைதானவர்களுக்கு விளக்கமறியல் 

by Staff Writer 16-09-2019 | 5:31 PM
Colombo (News 1st) பேருவளை கடற்பிராந்தியத்தில் 231 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயினை படகு மூலம் நாட்டுக்குக் கொண்டுவந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள படகு உரிமையாளர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் எண்மரும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (16) கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதேநேரம், சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் வழக்கின் இரண்டாவது பிரதிவாதி மொஹம்மட் பர்சானுக்கு நீதிமன்ற கட்டடத் தொகுதிக்குள் வைத்து 9 சிம் அட்டைகள், புகையிலை மற்றும் சிறிய கைக்கடிகாரம் அடங்கிய பொதியை இரகசியமாக வழங்கிய சந்தேகநபர் சிறைச்சாலை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார். சிறைச்சாலைக் கட்டுப்பாட்டாளரின் விசாரணையின்போது கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர் மற்றும் இரண்டாவது பிரதிவாதியைத் தடுத்துவைத்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதவான் இதன்போது வாழைத்தோட்டம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார்.