கட்சிக்கு விருப்பமெனின் ரணசிங்க பிரேமதாசவின் மகன் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் - சஜித் 

by Staff Writer 16-09-2019 | 9:13 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஜனாதிபதி வேட்பாளரை காலம் தாழ்த்தாது பெயரிடுமாறு குறித்த கடிதத்தில் பிரதித் தலைவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரை உடனடியாகப் பெயரிடுமாறு தமது கட்சியின் தலைவர் அதேபோன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய தேசிய முன்னணி இனியும் காத்திருக்க முடியாது எனவும்  இந்தத் தீர்மானத்தை காலம் தாழ்த்திச் செல்ல முடியாது எனவும் குறித்த கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தத் தாமதம் கட்சிக்கும் முன்னணிக்கும் நாட்டிற்கும் பாரிய தீங்காக அமையும் எனக் கூறிய அமைச்சர், தாமதமானது ஜனநாயகத்திற்கு விழுந்துள்ள பாரிய அடியென நான் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், ஐக்கிய தேசியக் கட்சிக்கு விருப்பமெனின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு விருப்பமெனின் ரணசிங்க பிரமேதாசவின் மகனான சஜித் பிரேமதாச இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயாராகவுள்ளார் எனத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார். இந்தநிலையில், தன்னைப் பெயரிடுவதில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதை மிக விரைவாக தாமதமின்றி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அதேபோன்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுவைக் கூட்டி தீர்வை எடுக்குமாறு கோரியுள்ளார். ஜனாநாயக ரீதியில் வேட்பாளரை பெயரிட வேண்டும் என்ற நிலை தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். அழுத்தத்தின் மூலம் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் எண்ணம் தனக்கில்லை எனவும் அழுத்தத்தை விடுக்கும் நபர் தான் அல்ல எனவும் தான் ஜனநாயக ரீதியில் செயற்படும் மனிதன் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு ஒன்றுபட்டு ஒற்றுமையாகத் தீர்வுகளை எடுக்க கடினமாயின் வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பை நடத்துவதற்கு செயற்குழுவுக்கும் பாராளுமன்றக் குழுவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சந்தர்ப்பத்தை வழங்குமாறு கோரியுள்ளார். அதற்கான காலம் தற்போது வந்துள்ளதாக தான் எண்ணுவதாகவும் இன்னமும் காலம் தாழ்த்த முடியாது எனவும் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அனைவருக்கும் நிழல் திட்டத்தின் கீழ் 287 மற்றும் 288 ஆவது கிராமங்கள் இன்று (16) முற்பகல் திஸ்ஸமகாராம, உத்தகந்தர பகுதிகளில் மக்களிடம் கையளிக்கப்பட்ட போதே சஜித் பிரேமதாச இந்தக் கருத்துக்களை வௌியிட்டுள்ளார். சந்தகுசும்கம மற்றும் சதேதிஸ்கம என பெயரிடப்பட்டுள்ள இந்தக் கிராமங்களில் 68 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, 2555 மற்றும் 2556 ஆகிய கிராமங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்து கொண்டிருந்தார்.