மணல் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம்

யாழில் STF துப்பாக்கிப் பிரயோகம்; ஒருவர் காயம்

by Staff Writer 15-09-2019 | 9:36 AM
Colombo (News 1st) யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியுள்ளனர். இதன்போது, காயமடைந்த ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அரியாலை பகுதியில் உழவு இயந்திரத்தினூடாக மணல் கடத்தப்படுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (14) மாலை 3.45 மணியளவில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 2 மோட்டார்சைக்கிள்களில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த பகுதிக்குச் சென்றுள்ளனர். மணல் கடத்தப்பட்ட உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு முன்னாள் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். இவர்களின் கட்டளையை மீறி உழவு இயந்திரம் பயணித்தபோது, குறித்த மோட்டார் சைக்கிள் வீதியில் புரண்டுள்ளது. பின்தொடர்ந்து வந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால், உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு மீண்டும் கட்டளை பிறப்பிக்கப்பட்டபோது அதனையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது, உழவு இயந்திரத்தின் சில்லுகளுக்கு துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பின்னர் பாழடைந்த காணியில் உழவு இயந்திரத்தைக் கைவிட்டுவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். எனினும், துப்பாக்கிப் பிரயோகத்தில் காலில் காயம் ஏற்பட்ட ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, சுற்றிவளைப்பின்போது விபத்துக்குள்ளான மோட்டார்சைக்கிளில் பயணித்த பொலிஸ் உத்தியோகத்தரும் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தப்பிச்சென்றுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.