ஐ.தே.க வேட்பாளருக்கு பொதுஜன பெரமுன பாராளுமன்றக் குழுவொன்றின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக தகவல்

by Staff Writer 14-09-2019 | 7:47 PM
Colombo (News 1st) ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற குழுவொன்றின் ஒத்துழைப்பு கிடைத்துள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார். குருநாகலில் நடைபெற்ற நிகழ்வின் பின்னரே அவர் இன்று இதனைக் கூறினார்.
பெரும்பான்மை கட்சிகள் எம்முடன் இணைவதற்காக கைச்சாத்திட்டுள்ளன. அதனால் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. ஐக்கிய தேசிய முன்னணி முன்வைக்கும் வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவார்
என அசோக் அபேசிங்க குறிப்பிட்டார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இம்மாதம் பெயரிடப்படுவார் என தாம் எதிர்பார்ப்பதாகவும் அசோக் அபேசிங்க தெரிவித்தார். வேட்பாளரைத் தெரிவு செய்யும் போது, இரகசிய வாக்கெடுப்பு இடம்பெறுமா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க,
இரண்டு, மூன்று பெயர்கள் முன்வைக்கப்பட்டால், ஒருவரைத் தெரிவு செய்ய நிச்சயமாக வாக்கெடுப்பை நடத்த வேண்டும். எமது செயற்குழு மற்றும் பாராளுமன்றக்குழுவை அழைத்ததும், இரகசிய வாக்கெடுப்பை கோருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.
என குறிப்பிட்டார்.